அதிகரிக்கும் ஆக்கிரமிப்புகள், போக்குவரத்து நெருக்கடி:ஸ்ரீவில்லிபுத்துார் பஸ் ஸ்டாண்டில் தவிக்கும் பயணிகள்
அதிகரிக்கும் ஆக்கிரமிப்புகள், போக்குவரத்து நெருக்கடி:ஸ்ரீவில்லிபுத்துார் பஸ் ஸ்டாண்டில் தவிக்கும் பயணிகள்
UPDATED : செப் 26, 2026 04:27 PM
ADDED : செப் 26, 2026 04:21 PM
ஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவில்லிபுத்துார் பஸ் ஸ்டாண்டில் நிழற்குடை இல்லாமல் பயணிகள் வெயிலுக்கும், மழைக்கும் தவிக்கும் நிலை, அதிகரிக்கும் ஆக்கிரமிப்புகள், போக்குவரத்து நெருக்கடி, சுகாதாரக் கேடு போன்ற அவலங்களால் பயணிகள் தினமும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்துார் பஸ் ஸ்டாண்ட்டை சுற்றி அரசு மருத்துவமனை, காய்கறி மார்க்கெட், தனியார் மருத்துவமனை, நகைக்கடை பஜார், ஓட்டல்கள் இருப்பதால் நகர் பகுதி மக்கள் மட்டுமின்றி பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஏராளமான மக்கள் தினமும் பஸ் ஸ்டாண்டிற்கு வந்து வெளியூர்களுக்கு பயணித்து வருகின்றனர்.
பஸ் ஸ்டாண்டில் கிழக்கு பகுதியில் தற்போது வணிக வளாகம் கட்டும் பணி நடப்பதால் நிழற்குடையோ, உட்கார இருக்கை வசதியோ இல்லாமல் மக்கள் வெயிலுக்கும், மழைக்கும் நின்று கொண்டே பஸ்சிற்காக காத்திருக்கும் நிலை உள்ளது.
பஸ்கள் நிற்கும் இடத்தில் தற்காலிக கடைகளுக்கு தகர செட்டுகள் அமைக்கப்பட்டுள்ளதால் எளிதில் பஸ்கள் வந்து செல்ல முடியாமல் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.
அதிலும் மினி பஸ்கள் தாறுமாறாக நிறுத்துவதால் எளிதில் வெளியூர் பஸ்கள் வந்து செல்ல முடியவில்லை. பஸ் ஸ்டாண்டில் வடக்கு , மேற்கு பகுதியில் ஏராளமான டூவீலர்கள் நிறுத்தப்பட்டு, டூவீலர் காப்பகம் போல் பஸ் ஸ்டாண்ட் மாறி வருகிறது.
தரைத்தளங்கள் பெயர்ந்து ஆங்காங்கே பள்ளங்கள் உள்ளதால் முதியவர்கள், மாற்று திறனாளிகள் சிரமத்தை சந்திக்கின்றனர். கட்டணமில்லா கழிப்பிடம் இல்லாததால் ஏழை மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
இதேபோல் பஸ் ஸ்டாண்டின் வெளிப்பகுதியிலும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து எளிதில் பஸ்கள் வந்து செல்ல முடியாத நிலை உள்ளது. இத்தகைய குறைகளை சரி செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
* ஒழுங்குபடுத்த வேண்டும்
பஸ் ஸ்டாண்ட் உட்புறத்திலும், வெளிப்புறத்திலும் ஆக்கிரமிப்புகளும் தேவையில்லாத வாகனங்களும் நிறுத்தப்படுவதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதனால் தினமும் பயணிகள் சிரமத்தை சந்திக்கின்றனர். எனவே இதனை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நித்தியானந்தம், சுயதொழில் முனைவோர்
* வெயிலில் தவிப்பு
பழைய வணிக வளாகம் இருந்த இடத்தில் தற்போது கட்டுமான பணிகள் நடப்பதால் பஸ் ஸ்டாண்டில் கிழக்குப் பகுதியில் நிழற்குடையோ, இருக்கை வசதியோ இல்லாமல் மக்கள் தவிக்கும் நிலை உள்ளது. எனவே தற்காலிகமாக கிழக்கு பகுதியில் நிழற்பந்தல் அமைத்து தர வேண்டும்.
- மாரிமுத்து, தனியார் ஊழியர்
* தினமும் சிரமம்
பஸ் ஸ்டாண்டின் உட்பகுதியில் வெளிப்பகுதியிலும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகிறது. கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு மக்கள் சிரமத்தை சந்திக்கின்றனர். கட்டணமில்லா கழிப்பிடம், குடிநீர், நிழற்பந்தல், இருக்கை வசதி இல்லாமல் தினமும் பயணிகள் சிரமத்தை சந்திக்கின்றனர். இதனை நகராட்சி நிர்வாகம் சரி செய்ய வேண்டும்.
- ஈஸ்வரன், சமூக ஆர்வலர்.
