செயல்பாடற்ற போலீஸ் புற காவல் நிலையம், குடிநீர் சுத்திகரிப்பு பிளான்ட்: சிரமத்தில் அருப்புக்கோட்டை காந்தி நகர் மக்கள்
செயல்பாடற்ற போலீஸ் புற காவல் நிலையம், குடிநீர் சுத்திகரிப்பு பிளான்ட்: சிரமத்தில் அருப்புக்கோட்டை காந்தி நகர் மக்கள்
UPDATED : அக் 10, 2026 04:53 PM
ADDED : அக் 10, 2026 04:46 PM
அருப்புக்கோட்டை: அருப்புகோட்டை காந்திநகர் பகுதியில் உள்ள நகராட்சி பஸ் ஸ்டாண்டில் புற காவல் நிலையமும், ஆர்வோ பிளான்டும் செயல்படாமல் காட்சி பொருளாகவும், ரோட்டின் இருபுறத்திலும் குப்பை கொட்டப்பட்டு தீ வைக்கப்படுகிறது.
அருப்புக்கோட்டை நகராட்சி 24 வது வார்டில், காந்திநகர், கணேஷ் நகர், நேதாஜி நகர் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இதில், காந்தி நகர் நகரின் மையப் பகுதியாக மாறி வருகிறது. வர்த்தக நிறுவனங்கள், ஓட்டல்கள் இங்குள்ளன. நகராட்சி மூலம் பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டுள்ளது. இதில், பயணிகளுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டாலும் பயன்பாட்டில் இல்லை. புறா காவல் நிலையம் இங்கு பூட்டியிருக்கிறது. குடிநீர் சுத்திகரிக்கப்பட்ட பிளான்ட் செயல்படாமல் உள்ளது. பஸ் ஸ்டாண்ட் எதிரே மதுரை - தூத்துக்குடி செல்லும் நான்கு வழி ரோட்டில் மேம்பாலம் உள்ளது. இதில் மின் விளக்குகள் அடிக்கடி பழுதாகி இருட்டாகவே உள்ளது. பஸ் ஸ்டாண்ட் அருகே சர்வீஸ் ரோட்டிலும் போதுமான மின் விளக்குகள் இல்லை.
தூத்துக்குடி, திருச்செந்தூரிலிருந்து சென்னை செல்லும் பஸ்கள் இரவு நேரங்களில் இங்கு வந்து நின்று பயணிகளை ஏற்றி செல்லும். இதனால் இங்கு கூட்டம் அதிகமாகவே இருக்கும். இரவு நேரங்களில் போலீஸ் பாதுகாப்பும், போதுமான மின் விளக்கும் தேவையாக உள்ளது. சர்வீஸ் ரோடு ஓரங்களில் தினமும் குப்பையை கொட்டி எரிக்கின்றனர். காந்தி நகர் பகுதியில் கஞ்சநாயக்கன்பட்டி செல்லும் சர்வீஸ் ரோடு இருப்பதால், ரோடு ஓரங்களில் அந்தப் பகுதியில் உள்ள ஒர்க் ஷாப்புகளின் கழிவுகளை கொட்டி எரிப்பதால் ஏற்படும் புகையால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
சர்வீஸ் ரோட்டில் இருபுறமும் கனரக வாகனங்கள் வரிசையாக நிற்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அருப்புக்கோட்டையில் இருந்து காந்திநகர் வழியாக ராமலிங்க மில் வரை உள்ள ரோடு அகலம் படுத்தப்படும் பணி நடந்து வருகிறது. ரோட்டில் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி ரோடுகள் அமைக்க வேண்டும். காந்தி நகர் பகுதியில் மேம்பாலத்தின் கீழ் உள்ள சர்வீஸ் ரோட்டின் இருபுறமும் உள்ள மழைநீர் வரத்து ஓடையில் பல பகுதிகள் அடைக்கப்பட்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால், மழைக்காலங்களில் மழை வெள்ளம் ஓடையில் செல்ல முடியாமல் ரோட்டில் தேங்கி காந்தி நகர் சந்திப்பு முழுவதும் வெள்ளக்காடாக மாறிவிடுகிறது.
* பஸ் ஸ்டாண்டில் வசதிகள் தேவை
காயத்ரி, குடும்பதலைவி : காந்தி நகர் பஸ் ஸ்டாண்ட் கஞ்சநாயக்கன்பட்டி மற்றும் புறநகர் பகுதி மக்களுக்கு சென்னை,மதுரை, தூத்துக்குடி, திருச்செந்தூர் செல்ல வசதியாக உள்ளது. நகராட்சி பஸ் ஸ்டாண்டில் பயணிகளுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட வேண்டும். இரவு நேரங்களில் சென்னை செல்லும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருப்பதால் மின்விளக்கு வசதி கூடுதலாக செய்ய வேண்டும். இரவு நேர போலீஸ் பாதுகாப்பும் தேவையாக உள்ளது.
* ஓடைகளில் குப்பை
உமாசங்கர், தனியார் ஊழியர் : காந்தி நகர் பகுதியில் உள்ள சர்வீஸ் ரோடுகளின் இருபுறம் உள்ள மழை நீர் வரத்து ஓடைகளில் குப்பை கொட்டப்படுகின்றன. தினமும் தீவைத்து எரிப்பதால் ஏற்படும் காட்டமான புகையில் மக்களுக்கு மூச்சு திணறல் ஏற்படுகிறது. ரோட்டில் இருபுறமும் உள்ள ஓடைகளை தூர்வாரி மழை நீர் செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* வாறுகாலில் தேங்கும் கழிவுநீர்
சங்கீதா, குடும்ப தலைவி : காந்திநகர் அருகில் கஞ்சநாயக்கன்பட்டி உள்ளது. சர்வீஸ் ரோடு அருகில் உள்ள வாறுகால் சேதமடைந்து அடைபட்டு போனதால் கழிவு நீர் செல்ல முடியாமல் தேங்கி சுகாதாரக் கேடாக உள்ளது. குப்பைகளை சர்வீஸ் ரோடு அருகில் கொட்டுகின்றனர். இந்தப் பகுதியின் வழியாக செல்லும் குடிநீர் குழாய் கழிவு நீரில் மூழ்கி உள்ளது. தனியாக வாறு கால் அமைத்து கழிவுநீர் சீராக செல்ல ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
