/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கழுங்கை உடைத்து உபரி நீர் வெளியேற்றம் வயல்களை சூழ்ந்து நீரில் மூழ்கிய பயிர்கள்
/
கழுங்கை உடைத்து உபரி நீர் வெளியேற்றம் வயல்களை சூழ்ந்து நீரில் மூழ்கிய பயிர்கள்
கழுங்கை உடைத்து உபரி நீர் வெளியேற்றம் வயல்களை சூழ்ந்து நீரில் மூழ்கிய பயிர்கள்
கழுங்கை உடைத்து உபரி நீர் வெளியேற்றம் வயல்களை சூழ்ந்து நீரில் மூழ்கிய பயிர்கள்
ADDED : பிப் 01, 2024 07:08 AM

காரியாபட்டி : காரியாபட்டி குரண்டி கண்மாய் நிறைந்ததால் கழுங்கு பகுதியை உடைத்து உபரி நீரை வெளியேற்றியதால் தண்ணீர் அரசகுளம் பகுதி வயல்களைச் சூழ்ந்தது. இதனால் விளைந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகியதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
காரியாபட்டி கம்பிக்குடி, ஆவியூர், அரசகுளம், மாங்குளம், குரண்டி உள்ளிட்ட கண்மாய்களுக்கு நீர் ஆதாரம் வைகை ஆற்று தண்ணீர்தான். திறந்து விடப்படும் தண்ணீர் நிலையூர் வரத்து கால்வாய் வழியாக வந்து மாங்குளம், குரண்டி, ஆவியூர், அரசகுளம், கம்பிக்குடி கண்மாய்களுக்கு வரும்.
சில நாட்களுக்கு முன் நல்ல மழை பொழிவால் கண்மாய்க்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தற்போது அனைத்து கண்மாய்களும் நிறைந்துள்ளன. தொடர்ந்து வரத்துக்கால்வாயில் தண்ணீர் வருவதால் குரண்டி கண்மாய் நிறைந்தது. மேலும் தேக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் கழுங்கு பகுதியை அக்கிராமத்தினர் உடைத்தனர். கழுங்கு பகுதியில் இருந்து வெளியேறும் உபரி நீர், கம்பிக்குடி வரத்துக்கால்வாய்க்கு செல்ல வழியின்றி, வீணாக வெளியேறி அரசகுளம் கண்மாய் பகுதிக்கு செல்கிறது.
ஏற்கனவே முழு கொள்ளளவை எட்டியதால், நெற்பயிர்கள், வெள்ளரி, வெங்காயம் பயிரிடப்பட்டிருந்த வயல்கள், மானாவாரி பகுதிகளை சூழ்ந்தது. அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் செய்வதறியாது வேதனை அடைந்துள்ளனர்.
அரசகுளம் விவசாயிகள் கூறியதாவது:
100க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டு விளைந்து அறுவடைக்கு தயாராக உள்ளது. ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை செலவு செய்தோம். பறவைகள், காட்டுப் பன்றிகளிடமிருந்தும் இரவு கண்விழித்து பயிர்களை காத்து வந்தோம். அறுவடைக்கு தயாராக இருந்த சமயத்தில் கண்மாய் கழுங்கை உடைத்து வெளியேற்றினர்.
முறையான வரத்துக் கால்வாய் இல்லாததால் கம்பிக்குடி கண்மாய்க்கு செல்லாமல் வயல்வெளிக்குள் புகுந்தது. நெற்பயிர்கள் மட்டுமின்றி, மானாவாரி விவசாயம், தோட்ட விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு தண்ணீரில் மூழ்கி அழுகி வருகின்றன. பயிர்களை காப்பாற்ற முடியவில்லையே என வேதனையாக உள்ளது, என்றனர்.