ADDED : பிப் 04, 2025 04:54 AM

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே ரேஷன் கடை அமைப்பதில் இரு தரப்பினருக்கு பிரச்சினை ஏற்பட்ட நிலையில், இருதரப்பினரையும் தாலுகா அலுவலகத்தில் சமாதான கூட்டத்திற்கு வரவழைத்த நிலையில் ஒரு தரப்பினர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அருப்புக்கோட்டை அருகே நகராட்சி 35வது வார்டை சேர்ந்தது ராமசாமிபுரம். இப்பகுதி மக்கள் அருப்புக்கோட்டையில் உள்ள வடுகர் கோட்டைக்கு 2 கி.மீ., நடந்து சென்று ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கி வந்தனர்.
இந்நிலையில் ராமசாமிபுரம் பஸ் ஸ்டாப் அருகே ரேஷன் கடை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதில் ஊரைச் சேர்ந்த ஒரு தரப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மற்றொரு தரப்பினர் அரசு நிலத்தில் ரேஷன் கடை அமைக்க வேண்டும் என்று கூறினர். இதையடுத்து இருதரப்பினரும் தாலுகா அலுவலகத்தில் புகார் செய்த நிலையில், நேற்று இரு தரப்பினரையும் அழைத்து சமாதான கூட்டம் நடந்தது. கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போதே ஒரு தரப்பினை சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட பெண்கள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இரு தரப்பினரையும் தாசில்தார் செந்தி வேல் தனித்தனியாக பேசி இருவரிடத்திலும் அறிக்கைகள் பெற்று கலெக்டருக்கு அனுப்பப்படும் என கூறியதன் பேரில் கலைந்து சென்றனர்.