/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கல்குறிச்சியில் கலங்கலாக வரும் தாமிரபரணி குடிநீர்
/
கல்குறிச்சியில் கலங்கலாக வரும் தாமிரபரணி குடிநீர்
ADDED : பிப் 07, 2025 04:09 AM

காரியாபட்டி : காரியாபட்டி கல்குறிச்சியில் தாமிரபரணி குடிநீர் கலங்கலாக வருவதால் மக்கள் தொற்றுநோய் பரவும் அச்சத்தில் உள்ளனர். தரமான குடிநீர் சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
காரியாபட்டி கல்குறிச்சியில் குடிநீர் சப்ளை செய்ய உள்ளூரில் ஆழ்துளை கிணறு அமைத்து சப்ளை செய்யப்பட்டது. நாளடைவில் குடிநீர் சுவை மாறியதுடன், பற்றாக்குறை ஏற்பட்டது. சீரான குடிநீர் வழங்க, மாற்று இடத்தில்ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் சப்ளை செய்யப்பட்டது.
அதற்கு பின் மக்கள் தொகை பெருக்கம், நிலத்தடி நீர்மட்டம் குறைவு உள்ளிட்ட காரணங்களால், போதுமானதாக இல்லை. குடிநீர் பற்றாக்குறை அதிகரித்தது. இதையடுத்து தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. உள்ளூர் தண்ணீருடன் கலந்து தாமிரபரணி குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.
ஓரளவிற்கு போதுமானதாகவும் குடிக்க, சமைக்க, புழக்கம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து சில தினங்களாக குடிநீர் கலங்கலாக சப்ளை செய்யப்படுகிறது. வேறு வழி இன்றி மக்கள் இதனை பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது.
அவ்வாறு பயன்படுத்தி வருவதால் தொற்றுநோய் பரவும் அச்சத்தில் மக்கள் உள்ளனர். குடிநீர் கலங்கலாக வருவதை கண்டறிந்து, தேவையான நடவடிக்கை எடுத்து, தரமான குடிநீர் சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

