/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வரிகள் உயர்வு: வசதிகள் இல்லை கொந்தளிக்கும் புறநகர் மக்கள்
/
வரிகள் உயர்வு: வசதிகள் இல்லை கொந்தளிக்கும் புறநகர் மக்கள்
வரிகள் உயர்வு: வசதிகள் இல்லை கொந்தளிக்கும் புறநகர் மக்கள்
வரிகள் உயர்வு: வசதிகள் இல்லை கொந்தளிக்கும் புறநகர் மக்கள்
ADDED : ஜன 26, 2025 04:42 AM
அருப்புக்கோட்டை : வரிகளை உயர்த்தியும், அதை விரட்டி கட்ட வைப்பதில் மட்டும் முனைப்பு காட்டும் நகராட்சி 40 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் எதுவும் செய்யாமல் இருப்பதை கண்டு அருப்புக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட புறநகர் பகுதி மக்கள் கொந்தளிக்கின்றனர்.
அருப்புக்கோட்டை நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. ஒரு சில வார்டுகளில் வார்டுகளில் புறநகர் பகுதிகளும் அமைந்துள்ளன.
தெற்கு தெரு விரிவாக்கம், பார்வதி நகர் விரிவாக்க பகுதி உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் குடிநீர், வாறுகால், ரோடு, மின்விளக்கு உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. இதில், வார்டு 25 ல் உள்ள நேதாஜி நகர் விரிவாக்க பகுதி உருவாகி 40 ஆண்டுகள் ஆன நிலையில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. இங்கு நகராட்சி அனுமதி பெற்று வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
பூங்கா, சமுதாய கூடம் கட்ட இடங்கள், அகலமான இடைவெளி விட்டு தெருக்கள் என விதிகளின் படி இருந்தும், நகராட்சி அடிப்படை வசதிகள் எதுவும் செய்யவில்லை. வீட்டு வரிகளை உயர்த்த மட்டும் ஆர்வம் நகராட்சி வசதிகளை செய்வதில் மெத்தனம் காட்டுகிறது.
இப்பகுதி மக்கள் கூறுகையில், நேதாஜி நகர் விரிவாக்க பகுதியில் 30 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. வரிகளை தவறாமல் கட்டுகிறோம். ஆனால், எங்கள் பகுதியில் குடிநீர், வாறுகால், ரோடு, தெருவிளக்கு உள்ளிட்ட வசதிகள் இல்லை. வரி கட்டவில்லை என்றால், வீடு தேடி விரட்டி வசூல் செய்யும் நகராட்சி வசதிகள் செய்து தருவதிலும் அக்கறை காட்ட வேண்டும். தற்போது நகர் முழுவதும் பாதாள சாக்கடை திட்ட பணிகள் வரும் நிலையில் எங்கள் பகுதிக்கு இல்லை என்கின்றனர்.
மாவட்ட நிர்வாகம் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கொந்தளிக்கின்றனர்.