/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
டிராக்டரை நிறுத்தி குப்பை கொட்டும் டெக்னிக்
/
டிராக்டரை நிறுத்தி குப்பை கொட்டும் டெக்னிக்
ADDED : டிச 19, 2024 04:22 AM

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அண்ணாதுரை சிலை பகுதி அருகில் வியாபாரிகள் குப்பைகளை கொட்ட, ஒரு டிராக்டரை நகராட்சி நிறுத்தி வைத்துள்ளதால் போக்குவரத்திற்கு இடைஞ்சலும் சுகாதார கேடும் ஏற்படுகிறது.
அருப்புக்கோட்டையில் அண்ணாதுரை சிலை பகுதியில் காய்கறி மார்க்கெட், பல சரக்கு கடைகள், பாத்திர கடைகள், பழக்கடைகள், உள்ளிட்ட பல வியாபாரம் தொடர்பான நிறுவனங்கள் உள்ளன.
இந்தப் பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்வர். நகராட்சி புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து இந்த பகுதி வழியாகத்தான் பஸ்கள் வெளியூர்களுக்கு செல்லும்.
அதிகாலை முதல் காலை 8:00 மணி வரை இந்த பகுதியில் வியாபாரிகள் தங்கள் கடைகளுக்கான சரக்குகளை வாகனங்கள் மூலம் இறக்குவர்.
இந்தப் பகுதி கடைக்காரர்கள் முன்பு, தங்கள் கடைகளின் கழிவுகளை அண்ணாதுரை சிலை அருகில் வைக்கப்பட்டுள்ள 2 குப்பை தொட்டிகளில் கொட்டி வந்தனர்.
குப்பைகளை தொட்டியில் போடாமல் அதன் அருகிலேயே வீசி விடுவதால் அந்தப் பகுதி முழுவதும் துர்நாற்றமும் சுகாதார கேடும் ஏற்பட்டது.
இதையடுத்து நகராட்சியினர் சில மாதங்களுக்கு முன்பு, அந்தப் பகுதியில் ஒரு டிராக்டரை நிறுத்தி அதில் குப்பை கொட்ட வியாபாரிகளுக்கு அறிவுறுத்தினர்.
குப்பைகள் கொட்டப்பட்டு நிறைந்த உடன் டிராக்டர் நகராட்சி குப்பை கிடங்கு குப்பைகளை கொட்டி விட்டு மீண்டும் அந்த பகுதியில் நிற்கும். ஆனால் வியாபாரிகள் டிராக்டரில் குப்பைகளை கொட்டுவதோடு, அதன் அருகிலேயே போடுவதாலும் மீண்டும் சுகாதாரக் கேடும் துர்நாற்றமும் ஏற்படுகிறது.
டிராக்டர் நிற்பதால் போக்குவரத்திற்கு இடைஞ்சல் ஏற்படுகிறது .டிராக்டரை சுற்றி டூவீலர்கள் நிறுத்தப்படுவதால் வாகனங்கள் வந்து செல்ல முடியவில்லை.
இதுகுறித்து நகராட்சி தலைவர் சுந்தரலட்சுமி: அண்ணாதுரை சிலை பகுதியில் டிராக்டர் அகற்றுவது குறித்து ஆலோசனை செய்து மாற்று வழி செய்யப்படும்.
ஏற்கனவே நடைமுறையில் இருந்த, அந்தப் பகுதி கடைக்காரர்கள் குப்பைகளை ஒரு பிளாஸ்டிக் பையில் சேகரித்து நகராட்சி குப்பை வண்டி வரும்போது அதில் போட வேண்டும் என மீண்டும் அறிவுறுத்தப்படும். தவறினால் அபராதம் விதிக்கப்படும். என்றார்.