/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
டெங்கு மஸ்துார்களின் பணி 10 நாட்களாக குறைப்பு நோய் அபாயம் அதிகரிக்க வாய்ப்பு
/
டெங்கு மஸ்துார்களின் பணி 10 நாட்களாக குறைப்பு நோய் அபாயம் அதிகரிக்க வாய்ப்பு
டெங்கு மஸ்துார்களின் பணி 10 நாட்களாக குறைப்பு நோய் அபாயம் அதிகரிக்க வாய்ப்பு
டெங்கு மஸ்துார்களின் பணி 10 நாட்களாக குறைப்பு நோய் அபாயம் அதிகரிக்க வாய்ப்பு
ADDED : மார் 14, 2024 03:12 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்ட நிர்வாகம் டெங்கு மஸ்துார்களின் பணி நாளை மார்ச் மாதத்திற்கு 10 நாட்களாக குறைப்பு செய்துள்ளதால் சுகாதார பணிகள் பாதிக்கப்பட்டு நோய் அபாயம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
மாவட்டத்தில் ராஜபாளையத்தில் 2014ல் டெங்குவால் 22க்கும் மேற்பட்டோர் இறந்தனர். இதையடுத்து சுகாதாரத்துறை அமைச்சர், செயலாளர் ஆகியோர் முகாமிட்டு இங்கு பணி செய்தனர்.விருதுநகர் மாவட்டம் எப்போதுமே டெங்கு பாதிப்பில் முன்னணியில் உள்ளது.
சுகாதாரத்துறையின் ஆலோசனைக்கு மாறாக 2023ல் 573 ஆக இருந்து மஸ்துார் எண்ணிக்கை 285 ஆக குறைக்கப்பட்டது. தினமலர் நாளிதழில் வெளியான செய்தி எதிரொலியால் ஒரு நாள் விட்டு ஒரு நாள் வேலை வழங்குவது என்றும், ஊதியத்தை உயர்த்தி ரூ.490 ஆக நிர்ணயித்தும் மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.
இந்நிலையில் தற்போது மார்ச் மாதத்திற்கு10 நாட்கள் மட்டும் மஸ்துார்களுக்கு வேலை வழங்குவது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த நடைமுறைவரும் மாதங்களிலும் பின்பற்றும் வாய்ப்பு அபாயம் உள்ளது.
மாதத்தில் 10 நாட்கள் மஸ்துார் பணி என்றால் மீதி 20 நாட்கள் வேறு பணிக்கு செல்வது தவிர்க்க இயலாதது. அவ்வாறு 20 நாட்கள் வேறு பணி பார்த்து விட்டு மீண்டும் மஸ்துார் பணிக்கு வருவதற்கு வாய்ப்பு குறைவு. இதனால் அனுபவம் வாய்ந்த மஸ்துார்களை இழக்க நேரிடும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். இதனால் தொற்று நோய் பணிகள் பாதிக்கப்படும். நோய் அபாயமும் அதிகரிக்கும்.
இது குறித்து அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் வைரவன் கூறியதாவது: சுகாதாரத்துறை துவங்கப்பட்ட காலம் முதல் தொற்று நோய் பரவலை தடுக்கும் பணியை மஸ்துார்கள் செய்து வருகின்றனர். இவர்கள்டெங்கு தடுப்பு பணிகளை மட்டும் செய்யவில்லை. கொசுவால் பரவும் அனைத்து நோய் தடுப்பு பணிகளையும் செய்து வருகின்றனர்.
மஸ்துார்கள் தொற்று நோய் தடுப்பு பணி மட்டுமல்ல, முகாம் ஏற்பாடுகள், துறையில் அடித்தள பணிகளை செய்து வருகின்றனர்.மஸ்துார்கள் செய்யும் பணியை செலவீனமாக பார்க்கும் பார்வை ஆரோக்கியமானது அல்ல.எனவே மாவட்ட நிர்வாகம் அறிவிப்பை மறுபரிசீலனை செய்து ஒரு நாள் விட்டு ஒரு நாள் பணி வழங்க வேண்டும் என்றார்.

