ADDED : செப் 11, 2026 12:18 AM

விருதுநகர்: விருதுநகர் நகரின் மையத்தில் அமைந்துள்ள 160 ஆண்டுகள் பழமையான கோயில் தெப்பத்தை துார்வாரும் பணி துவங்கி உள்ளது.
1866ல் தெப்பம் கட்டும் பணி 2.200 ஏக்கர் பரப்பில் துவங்கியது. இதன் ஆழம் 21 அடி. தண்ணீர் கொள்ளளவு 5 கோடி லிட்டர். தெப்பம் பராமரிப்பை விருதுநகர் ஹிந்து நாடார்கள் பலசரக்கு கடை மகமையினர் செய்கின்றனர்.
தெப்பத்தில் நீரோட்டம் இருக்க வேண்டி வடமலைக்குறிச்சி ரோட்டில் கவுசிகா நதி நீரோட்ட பாதையில் வரும் நீரை சேமிக்க ஒரு இடம் வாங்கி குட்டை அமைத்து அங்கிருந்து 5 கி.மீ., தொலைவில் உள்ள தெப்பத்திற்கு மோட்டார் பம்பு வைத்து நீரை நிரப்பி வருகின்றனர்.
தெப்பத்தின் நான்கு திசைகளிலும் ஹிந்து நாடார்கள் தேவஸ்தானத்தின் வெற்றி விநாயகர், சொக்கர் மீனாட்சி, ஞானதண்டாயுதபாணி, சனீஸ்வரர் உள்ளிட்ட 8 கோயில்கள் அமைந்துள்ளன. தெப்பத்தை சுற்றியுள்ள பகுதிகளில் எப்போதும் மக்கள் குடிநீர் பிடித்து கொள்ள வசதியாக குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது.
