/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல் கோழைத்தனமானது
/
காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல் கோழைத்தனமானது
ADDED : ஏப் 24, 2025 06:40 AM
சாத்துார்: காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல் கோழைத்தனமானது காங்கிரஸ் இதை அரசியலாக்காது, என மாணிக்கம் தாகூர் எம்.பி. தெரிவித்தார்.
சாத்துார் நான்கு வழிச்சாலையில் ரூ 31 கோடியில் புதிய மேம்பாலம் கட்டுவதற்காக நடந்த பூமி பூஜையில் பங்கேற்ற மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறியதாவது:
கலெக்டர் அலுவலகம்,சூலக்கரை, படந்தால் ஜங்ஷன் உள்படஐந்து இடங்களில் தற்போது மேம்பாலம் கட்டப்பட உள்ளது. சாத்துார் நான்கு வழிச்சாலை ரூ 31 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டப்படும். இந்தப் பணி 12 மாதத்தில் முடிவடையும். நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
காஷ்மீர் பஹல்காம் தாக்குதல் கோழைத்தனமானது. காங்கிரஸ் இந்த தாக்குதலை இந்தியாவின்மீதான தாக்குதலாக பார்க்கிறது. தேசிய புலனாய்வுத்துறை விசாரித்து உண்மையை நாட்டுக்கு தெரிவிக்க வேண்டும் இதில் பா.ஜ அரசு அரசியல்செய்யக்கூடாது. காங்கிரஸ் இந்த பிரச்சனையில் அரசியல் செய்யாது.
நம் நாட்டில் நாடாளுமன்றம், நீதித்துறை, அரசாங்க நிர்வாகம் ஆகியவை சம அதிகாரம் பெற்றவை. துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் நாடாளுமன்றத்திற்கே அதிகாரம் உள்ளது எனக் கூறுவது வியப்பாக உள்ளது. நம் நாட்டில் அரசியலமைப்பு சட்டமே உயர்ந்த அதிகாரம் பெற்றது. டாஸ்மாக்கில் அமலாக்கத்துறை ரெய்டு சம்பந்தமாக உயர் நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவு தமிழக அரசுக்கு பின்னடைவாக கருத முடியாது.
அ.தி.மு.க., பா.ஜ.,கூட்டணி ஏற்கனவே மூன்று முறை தோல்வியை சந்தித்துள்ளது. மீண்டும் அவர்கள் தோல்வியை சந்திப்பார்கள். தவெக கட்சி தலைவர் விஜய் 2 மாதத்தில் மக்களை சந்திக்கிறேன் எனக் கூறியுள்ளார் அவர் தற்போதாவது மக்களை சந்திக்க போகிறாரே என்பது மகிழ்ச்சி தருகிறது என்றார்.

