/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அவசர சிகிச்சை பிரிவு இல்லாமல் பரிதவிக்கும் மக்கள் காரியாபட்டி அரசு மருத்துவமனையின் நிலை
/
அவசர சிகிச்சை பிரிவு இல்லாமல் பரிதவிக்கும் மக்கள் காரியாபட்டி அரசு மருத்துவமனையின் நிலை
அவசர சிகிச்சை பிரிவு இல்லாமல் பரிதவிக்கும் மக்கள் காரியாபட்டி அரசு மருத்துவமனையின் நிலை
அவசர சிகிச்சை பிரிவு இல்லாமல் பரிதவிக்கும் மக்கள் காரியாபட்டி அரசு மருத்துவமனையின் நிலை
ADDED : அக் 18, 2025 03:33 AM

காரியாபட்டி: காரியாபட்டி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு இல்லாததால் விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற முடியாமல் வெளி மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதால் மக்கள் மிகுந்த பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர்.
காரியாபட்டி் அரசு மருத்துவமனைக்கு சுற்று கிராமங்களிலிருந்து தினமும் 600 பேர் வெளி நோயாளிகளாகவும், நூற்றுக்கு மேற்பட்டோர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். பல்வேறு அறுவை சிகிச்சைகள் நடைபெறுகின்றன. அதற்கு ஏற்ப, டாக்டர்கள், செவிலியர்கள், உதவியாளர்கள், உள்கட்டமைப்பு வசதிகள் மிக குறைவாக இருந்தது. பல்வேறு கோரிக்கைகளுக்கு பின் ஒரு சில திட்டத்தின் கீழ் கூடுதல் கட்டடங்கள் கட்டப்பட்டும், சமீபத்தில் ரூ. 5 கோடி மதிப்பில் புதிய கட்டட மும் கட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில் விபத்தில் சிக்கி காயமடைபவர்களுக்கு சிகிச்சை அளிக்க அவசர சிகிச்சை பிரிவு கிடையாது. போதிய உபகரணங்கள் இல்லாததால் முதலுதவி செய்து, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட ஊர்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். ஒரு மணி நேர பயணத்திற்கு பின் மற்ற மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வேண்டிய சூழ்நிலை இருப்பதால், சில நேரங்களில், நோயாளிகள் தாக்குப் பிடிக்க முடியாமல் உயிரிழக்க நேரிடுகிறது. அது போன்று பல சம்பவங்கள் நடந்துள்ளன. இப்பகுதிக்கு இந்த அரசு மருத்துவமனை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதால், அவசர சிகிச்சை பிரிவு ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது.
கூடுதல் டாக்டர்கள் வேண்டும்:
பாஸ்கரன், தனியார் ஊழியர்.
சர்க்கரை, ரத்த அழுத்தம் என பல்வேறு நோய்களுக்கு மருந்து, மாத்திரைகள் வாங்க காலை நேரத்தில் அதிக அளவில் நோயாளிகள் வந்து செல்கின்றனர். விபத்து நேரங்களில் சிகிச்சை அளிக்க போதிய டாக்டர்கள், உபகரணங்கள் கிடையாது. இரவு நேரங்களில் ஆத்திர அவசரத்துக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளது. நோயாளிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப டாக்டர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவசர சிகிச்சை பிரிவு வேண்டும்:
திருமலை, தனியார் ஊழியர்.
விபத்தில் சிக்குபவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வசதி இல்லாததால் மதுரை, விருதுநகர் உள்ளிட்ட ஊர்களுக்கு முதலுதவி அளித்து அனுப்பி வைக்கின்றனர். பலர் இறக்க நேரிடுகிறது. இங்கு உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. நீண்ட நாள் கோரிக்கையாக இருக்கும் அவசர சிகிச்சை பிரிவுக்கு இட ஒதுக்கீடு செய்து, தேவையான உபகரணங்கள், டாக்டர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டாக்டர், வெங்கடேஸ்வரன், மருத்துவ அலுவலர், காரியாபட்டி.
ரூ. 3 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டடப்பட்டு வரும் கட்டடத்தில், அவசர சிகிச்சை பிரிவு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் துவக்கப்படும் என்றார்.
தீர்வு :
மதுரை தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு, பலத்த காயத்துடன் வருகின்றனர். அதேபோல் திடீரென உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வருபவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்க வசதி இல்லாததால் பாதிக்கப்படுகின்றனர். புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. அதில் விபத்து அவசர சிகிச்சை பிரிவு துவங்கவும் எலும்பு முறிவு மருத்துவர், அறுவை சிகிச்சை மருத்துவர்களை நியமிக்கவேண்டும்.
படங்கள் உண்டு.