ADDED : பிப் 17, 2024 04:37 AM
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நாச்சியார்பட்டியில் தனது விவசாய நிலத்தை சுற்றி தீப்பிடித்த நிலையில் தனது நிலத்திலும் தீப்பிடித்து விடுமோ என்ற அச்சத்தில் தீயை அணைத்த விவசாயி ராதாகிருஷ்ணன், 67, என்பவர் தீயில் சிக்கி பலியானார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா நாச்சியார் பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன், 67. இவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் மக்காச்சோளம் பயிரிட்டு இருந்தார். அதனை நேற்று முன்தினம் இயந்திரம் மூலம் அறுவடை செய்தார்.
இந்நிலையில் தனது விவசாய நிலத்தில், நேற்று மதியம் 2:00 மணிக்கு சிதறிய மக்காச்சோள கதிர்களை எடுத்துக் கொண்டிருக்கும்போது, அருகிலுள்ள விவசாய நிலங்களில் எரிந்த தீ தனது காட்டிலும் பற்றி விடுமோ என்ற அச்சத்தில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது தீ ராதாகிருஷ்ணன் மீது பட்டதில் சம்பவ இடத்தில் அவர் உடல் கருகி இறந்து விட்டார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா போலீசார், ராஜபாளையம் தீயணைப்புத் துறையினர் ராதாகிருஷ்ணன் உடலை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.