/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தேங்காய் விற்பனையை பாதுகாக்க அரசு முன்வர வேண்டும்
/
தேங்காய் விற்பனையை பாதுகாக்க அரசு முன்வர வேண்டும்
ADDED : ஏப் 28, 2024 06:06 AM
விருதுநகர் மாவட்டத்தில் தேவதானம், சேத்தூர், ராஜபாளையம், அய்யனார் கோயில், மம்சாபுரம் ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத் தோப்பு , வத்திராயிருப்பு, கான்சாபுரம், பிளவக்கள் அணை, நெடுங்குளம், சேது நாராயணபுரம், மகாராஜபுரம், தம்பிபட்டி, தாணிப்பாறை ஆகிய மலை அடிவார பகுதிகளில் பல ஆயிரம் பரப்புளவிலும், நகர்ப்புறங்களில் ஏக்கர் பரப்பளவிலும் தென்னை விவசாயம் நடந்து வருகிறது.
பல ஆயிரம் தென்னந்தோப்பு உரிமையாளர்கள் ஆண்டு முழுவதும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் தென்னை விவசாயத்தை மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் தொய்வின்றி செய்து வருகின்றனர்.
மாவட்டத்தில் எப்படி மா உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டு உள்ளதோ அதேபோல தென்னந் தோப்புகளில் தேங்காய் விளைச்சல் நன்றாக இருந்த போதிலும் விவசாயிகள் எதிர்பார்க்கும் விலை கிடைக்காததால் தற்போது மிகுந்த பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகி வருகின்றனர் தென்னை விவசாயிகள்.
மாவட்டத்தில் உள்ளூர் தேவையை பூர்த்தி செய்த போதிலும் பல்வேறு வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் தேங்காய் ஏற்றுமதி நடந்து வருகிறது. நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த மழையின் காரணமாக தற்போது மேற்கு தொடர்ச்சி மலை அடிவார தோப்புகளில் அதிகளவில் தேங்காய் விளைச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது ஒரு தேங்காயின் விலை குறைந்தபட்சம் ரூ.6 முதல் அதிகபட்சம் ரூ. 7 வரை மட்டுமே நிர்ணயம் செய்து வியாபாரிகள் மொத்தமாக வாங்கி செல்கின்றனர்.
தற்போதைய பொருளாதார சூழலில் தேங்காய் உற்பத்தி செலவு உரம், கூலி ஆட்கள் உட்பட பல்வேறு செலவுகள் உள்ள நிலையில் கொள்முதல் செய்யும் விலை குறைவாக இருப்பதால் நஷ்டத்திற்கு ஆளாகும் சூழல் தென்னை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரு காலத்தில் தென்னை தோப்பு வைத்திருப்பவர்கள் எல்லாம் செல்வந்தர் என்ற நிலை மாறி தற்போது தென்னந்தோப்பு வைத்திருப்பவர்கள் கடன்காரனாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
ஆண்டுதோறும் இத்தகைய சிரமத்திற்கு ஆளாகி வருவதால் தேங்காய் விற்பனையை பாதுகாக்க தமிழக அரசு புதிய திட்டங்களை உருவாக்க வேண்டும். தேங்காய்களுக்கு நல்ல விலை கிடைக்க செய்ய வேண்டும் என்பது தென்னை விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இது குறித்து தென்னை விவசாயி மம்சாபுரம் முத்தையா கூறுகையில், ஒரு காலத்தில் மிகவும் லாபகரமாக இருந்த தென்னந்தோப்பு தொழில் தற்போது விவசாயிகளை கடன் சுமைக்கு ஆளாக்கும் சூழல் உள்ளது. 10 ஆயிரம் தேங்காய்கள் விற்க வேண்டுமெனில் வியாபாரிகளுக்கு தரகு 1500 காய்கள் லாபக் காயாக கொடுக்க வேண்டியது உள்ளது.
இது போக தேங்காய் வெட்டுபவர் கூலியாட்கள் , வாகனத்தில் எடுத்து செல்பவர்களும் சம்பளம் போக தேங்காய்களை இலவசமாக கேட்கின்றனர். இதனால் தென்னை விவசாயிகள் கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகும் நிலை உள்ளது.
எனவே, நெல்லை போல தேங்காய்க்கும் கொள்முதல் விலையை மாநில அரசு நிர்வாகம் நிர்ணயம் செய்ய வேண்டும். ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் இவ்வாறு செய்தால்தான் தேங்காய் களுக்கு நல்ல விலை கிடைத்து தொடர்ந்து சிரமமின்றி தென்னை விவசாயத்தை செய்ய முடியும் சூழல் ஏற்படும். என்றார்.

