/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
இருக்கன்குடி கோயிலில் தை கடைசி வெள்ளி திருவிழா
/
இருக்கன்குடி கோயிலில் தை கடைசி வெள்ளி திருவிழா
ADDED : பிப் 08, 2025 04:37 AM
சாத்துார்: இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் தை மாதம் கடைசி வெள்ளி கிழமையை முன்னிட்டு பெருந்திருவிழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் தை ,ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமை அன்று பெருந்திருவிழா நடைபெறும்.நேற்று தை மாதம் கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்தனர்.
திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு அதிகாலை 5:00 மணிக்கு பால், மஞ்சள் பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் நடந்தது.
பக்தர்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்தும், முடி காணிக்கை செலுத்தியும் அம்மனை வழிபட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
ஏற்பாடுகளை ஹிந்து சமய அறநிலைத்துறை மாவட்ட உதவி கமிஷனர் நாகராஜன், கோயில் உதவி ஆணையர் இளங்கோவன்,கோயில் பரம்பரை பூஜாரிகள் அறங்காவலர் குழுத் தலைவர் ராமமூர்த்தி பூஜாரி, பரம்பரை அறங்காவலர் குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
சாத்துார் டி.எஸ்.பி.நாகராஜன் தலைமையில் நுாற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர் . விருதுநகர் சாத்துார் சிவகாசி அருப்புக்கோட்டை கோவில்பட்டி துாத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து கோயிலுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.