ADDED : அக் 28, 2025 03:32 AM

விருதுநகர்: விருதுநகரில் தொடர் மழை, இதமான சூழலால் நான்கு வழிச்சாலை மீடியன்களில் நடப்பட்ட செடிகள் பசுமையாகி பூக்கள் பூத்து குலுங்குகின்றன.
விருதுநகரின் மையப்பகுதியை பிரித்து மதுரை - கன்னியாகுமரி நான்கு வழிச்சாலை செல்கிறது. மீடியன்கள் பசுமையாக இருக்கவும், எதிர்ப்புற வெளிச்சம் வரும் வாகனங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாமல் இருக்கவும், அவற்றில் அரளி செடிகள் உள்ளிட்ட செடி வகைகள் நடப்பட்டன. இவை ஒரு பகுதியில் சீராகவும், இன்னொரு பகுதியில் போதிய நீரின்றி காய்ந்தும் காணப்படும்.
வாரம் இருமுறை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நீர் ஊற்றினாலும் இவை பிழைப்பதில்லை. ஆனால் இவை பருவமழை தொடர்ந்து பெய்யும் போது துளிர்விட்டு கிளை பரவுவது, பூக்கள் பூப்பது போன்றவை நடக்கும்.
அக். 17 முதல் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று மோந்தா புயல் ஆந்திராவை நோக்கி நகர்ந்ததால் இருள் சூழ்ந்த மேக மூட்டம் காணப்பட்டது.
இந்நிலையில் நாள் முழுவதும் மீடியனில் இருந்த செடிகள் பசுமையாக காணப்பட்டன. மஞ்சள் பூக்கள் பூத்து பசுமையாக காணப்பட்டன.

