
ஸ்ரீவில்லிபுத்துார்:வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் நேற்று சொர்க்க வாசல் திறப்பு நடந்தது.
நேற்று அதிகாலை 3:30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு பெரிய பெருமாள், ஆண்டாள், ரெங்க மன்னார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டனர். காலை 7:02 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு ஆழ்வார்கள் எதிர்கொண்டு வணங்கினர்.
பின்னர் சொர்க்கவாசல் வழியே முதலில் பெரிய பெருமாளும், அதனையடுத்து ஆண்டாள், ரெங்கமன்னார் எழுந்தருளினர்.
பின்னர் ஆழ்வார்கள் வரவேற்று முன் செல்ல மாடவீதி, கந்தாடை வீதி வழியாக ராப்பத்து மண்டபத்திற்கு பெரிய பெருமாள், ஆண்டாள், ரெங்க மன்னார் எழுந்தருளினர். அங்கு ஆழ்வார்கள் மங்களாசாசனம், திருவாய்மொழி துவக்கம், அரையர் அருளிப்பாடு, பெரிய பெருமாள் பக்தி உலாவுதல், அரயர் வியாக்கியானம், சேவகாலம், கோஷ்டி நடந்தது. மாலை 4:00 மணிக்கு ஆண்டாள், ரெங்க மன்னார் மூலஸ்தானம் சென்றடைந்தனர்.
விழாவில் சடகோப ராமானுஜ ஜீயர், அறநிலையத்துறை உதவி ஆணையர் நாகராஜ், எஸ்.பி., கண்ணன், அறங்காவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வெங்கட் ராமராஜா, செயல் அலுவலர் சக்கரையம்மாள், ஊழியர்கள் செய்திருந்தனர். ஜன.20 வரை ராப்பத்து உற்ஸவம் நடக்கிறது.

