/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரோடு, வாறுகால் சேதம், துார்வாராத ஓடை சங்கடத்தில் சன்னாசிப்பட்டி லட்சுமி நகர் குடியிருப்பு வாசிகள்
/
ரோடு, வாறுகால் சேதம், துார்வாராத ஓடை சங்கடத்தில் சன்னாசிப்பட்டி லட்சுமி நகர் குடியிருப்பு வாசிகள்
ரோடு, வாறுகால் சேதம், துார்வாராத ஓடை சங்கடத்தில் சன்னாசிப்பட்டி லட்சுமி நகர் குடியிருப்பு வாசிகள்
ரோடு, வாறுகால் சேதம், துார்வாராத ஓடை சங்கடத்தில் சன்னாசிப்பட்டி லட்சுமி நகர் குடியிருப்பு வாசிகள்
ADDED : நவ 06, 2024 07:05 AM

சிவகாசி : சிவகாசி அருகே பூலாவூரணி ஊராட்சி சன்னாசிப்பட்டி லட்சுமி நகரில் தெருக்களில் ரோடு, வாறுகால் சேதம், ஓடை துார்வார வில்லை என குடியிருப்போர் எண்ணற்ற பிரச்னைகளில் சிக்கித் தவிக்கின்றனர்.
இதுகுறித்து லட்சுமி நகர் குடியிருப்போர் நலச் சங்க நிர்வாகிகள் நாகம்மாள், சாரதா, கனகலட்சுமி, அழகம்மாள், கிருஷ்ணம்மாள் கூறியதாவது, சன்னாசிப்பட்டி லட்சுமி நகரில் 2008 ல் தெருக்களில் ரோடு போடப்பட்டிருந்தது. தற்போது ரோடு முற்றிலும் சேதம் அடைந்து குண்டும் குழியுமாக மாறிவிட்டது.
மழைக்காலங்களில் தண்ணீர் வெளியேற வழி இன்றி ரோட்டிலேயே தேங்கி விடுகின்றது. சகதியாக மாறி விடுவதால் இதில் கார் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வர முடியவில்லை. இதனால் வாகனங்களை மெயின் ரோட்டிலேயே நிறுத்தி நடந்து வர வேண்டி உள்ளது. அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் வாகனமும் வருவதற்கு வழியில்லை.
வாறுகால் சேதமடைந்து இருப்பதால் கழிவுநீர் வெளியேற வழி இல்லை. இதனால் குழந்தைகள், பெரியவர்கள் அடிக்கடி தொற்று நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அலைய வேண்டியுள்ளது. ஒரு சில தெருக்களில் வாறுகால் அமைக்கப்படவே இல்லை.
எனவே இப்பகுதியில் உடனடியாக ரோடு, வாறுகால் அமைக்க வேண்டும். காலிமனைகளில் ஆக்கிரமித்துள்ள சீமைக் கருவேல மரங்களில் பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகள் தங்கள் இருப்பிடமாக பயன்படுத்துகின்றன. இவைகள் குடியிருப்புப் பகுதிகளில் நடமாடுவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
தெருவின் நுழைவு பகுதியில் மெயின் ரோட்டில் உள்ள ஓடை முழுவதும் முட்புதர்கள் ஆக்கிரமித்துள்ளது. ஓடையை துார்வார வேண்டும்.
மெயின் ரோட்டில் உள்ள பாலத்தில் ஒருபுறம் ஓடையும் மறுபுறம் ஊருணியும் உள்ளது. இருபுறமும் தடுப்புச் சுவர் இல்லை. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடனே செல்ல வேண்டியுள்ளது.
சற்று கவனம் சிதறினாலும் கீழே விழ வாய்ப்பு உள்ளது. எனவே உடனடியாக தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும். ஊருணி முழுவதுமே கழிவு நீர் தேங்கி பாசி படர்ந்துள்ளது. ஊருணியை துார்வாரி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.