/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வங்கிகள் இருக்கு; ஏ.டி.எம்.,கள் இல்லை தவிக்கும் ராணுவ வீரர்கள் குடும்பத்தினர்
/
வங்கிகள் இருக்கு; ஏ.டி.எம்.,கள் இல்லை தவிக்கும் ராணுவ வீரர்கள் குடும்பத்தினர்
வங்கிகள் இருக்கு; ஏ.டி.எம்.,கள் இல்லை தவிக்கும் ராணுவ வீரர்கள் குடும்பத்தினர்
வங்கிகள் இருக்கு; ஏ.டி.எம்.,கள் இல்லை தவிக்கும் ராணுவ வீரர்கள் குடும்பத்தினர்
ADDED : நவ 13, 2024 06:40 AM
ஸ்ரீவில்லிபுத்தூர்: தமிழகத்தில் குட்டி பஞ்சாப் என்று அழைக்கப்படும் ஸ்ரீவில்லிபுத்தூர் பெருமாள் தேவன்பட்டியில் கனரா வங்கி, கூட்டுறவு வங்கிகள் உள்ள நிலையில் ஏ.டி.எம்.கள் இல்லாமல் ராணுவ வீரர் குடும்பத்தினர் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா பெருமாள்தேவன் பட்டியை சுற்றி பிள்ளையார் குளம், துலுக்கன்குளம், வேப்பங்குளம் உட்பட பல்வேறு கிராமங்கள் உள்ளது. இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இதில் பெருமாள் தேவன் பட்டியில் மட்டும் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தற்போது வசித்து வருகின்றனர். இவர்களில் வீட்டுக்கு ஒருவர் ராணுவத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களின் நலன் கருதி அங்கு கனரா வங்கி மற்றும் கூட்டுறவு வங்கிகள் செயல்பட்டு வருகிறது.
ஆனால் இந்த இரு வங்கிகளின் சார்பில் ஏ.டி.எம்.கள் இல்லாததால் மக்கள் அவசர நேரங்களில் பணம் எடுப்பதற்காக சுமார் 10 கிலோமீட்டர் தூரம் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வந்து செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.
இதனால் வழிப்பறி அபாயமும் உள்ளது. எனவே, பெருமாள் தேவன் பட்டியில் ஏ.டி.எம்.கள் அமைக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாகும்.
இதுகுறித்து பெருமாள்தேவன்பட்டி சங்கரநாராயணன் கூறுகையில், நாட்டுக்காக பாடுபடும் ஏராளமான ராணுவ வீரர்கள் உள்ள எங்கள் கிராமத்தில் 2 வங்கிகள் இருந்தும், ஒரு ஏ.டி.எம்.கள் கூட இல்லாததால் பணம் எடுக்க மிகுந்த சிரமப்பட்டு வருகிறோம்.
மேலும் பல குடும்பங்களில் பெண்கள் மட்டுமே வசித்து வரும் நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் சென்று பணம் எடுத்து வருவது பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது.
எனவே, உடனடியாக ஏ.டி.எம். அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.