/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சாத்துார் அரசு ஆட்டுப்பண்ணையில் 4 மாதங்களாக கால்நடை டாக்டர் இல்லை
/
சாத்துார் அரசு ஆட்டுப்பண்ணையில் 4 மாதங்களாக கால்நடை டாக்டர் இல்லை
சாத்துார் அரசு ஆட்டுப்பண்ணையில் 4 மாதங்களாக கால்நடை டாக்டர் இல்லை
சாத்துார் அரசு ஆட்டுப்பண்ணையில் 4 மாதங்களாக கால்நடை டாக்டர் இல்லை
ADDED : ஆக 01, 2025 01:48 AM
விருதுநகர்:விருதுநகர் மாவட்டத்தில் சாத்துார் - இருக்கன்குடி ரோட்டில் கால்நடைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அரசு ஆட்டுப்பண்ணையில் 4 மாதங்களாக டாக்டர் பணியிடம் காலியாக உள்ளது. இங்கு பணிகள் பாதிக்கப்படுவதை தடுக்க உடனடியாக கால்நடை டாக்டரை நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தின் பாரம்பரிய ஆடுகளை பாதுகாத்து, இனத்தை பெருக்கவும், ஆடுகள் வளர்ப்பு என்ற துணை தொழில் மூலம் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்காக சாத்துார், சிவகங்கை செட்டிநாடு, திருநெல்வேலி அபிஷேகப்பட்டி, ஓசூர், தஞ்சாவூர் நடுவூர், ஊட்டி, புதுக்கோட்டை உள்பட 13 இடங்களில் கால்நடை பராமரிப்புதுறை கட்டுப்பாட்டில் அரசு ஆட்டுப்பண்ணைகள் செயல்படுகின்றன.
சாத்துார் - இருக்கன்குடி ரோட்டில் 1967ல் முன்னாள் முதல்வர் காமராஜரால் 153 ஏக்கரில் அரசு ஆட்டுப்பண்ணை துவக்கி வைக்கப்பட்டது. இவற்றில் பாரம்பரிய ஆடு வகைகளான கன்னி வெள்ளையாடுகள், வேம்பூர் செம்மறியாடுகள் என மொத்தம் 600 பராமரித்து மேய்ச்சல் முறையில் வளர்க்கப்படுகிறது.
இங்கிருந்து ஆறு மாத கிடாய்கள் மட்டும் உயிருடன் ஒன்று ஒரு கிலோ ரூ. 400 வரை நிர்ணயம் செய்யப்பட்ட விலையில் பதிவு செய்த விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் நாட்டு ஆட்டு வகைகள் பாதுகாக்கப்பட்டு மொத்த எண்ணிக்கையில் 600 குறையாத வகையில் வளர்த்து, பராமரித்து, விற்கப்படுகிறது.
தமிழகத்தில் இந்த ஆட்டுப்பண்ணைகள் துவங்கிய போது நியமிக்கப்பட்ட கால்நடை மருத்துவர் பணியிடங்கள் தற்போது வரை அதிகரிக்கப்படாமல் உள்ளது. இந்நிலையில் சாத்துார் அரசு ஆட்டுப்பண்ணையில் பணிபுரிந்த மருத்துவர் பணியிட மாறுதல் பெற்று வேறு மாவட்டத்திற்கு சென்றார்.
சாத்துார் அரசு ஆட்டுப்பண்ணையில் மொத்த எண்ணிக்கையை 1000 ஆக உயர்த்த கால்நடைத்துறை மூலம் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் 4 மாதங்களை கடந்தும் பணியிட மாறுதலில் சென்றவருக்கு பதிலாக புதிய டாக்டர் நியமிக்கப்படாததால் பணிகள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
மேலும் ஆட்டுப்பண்ணையை மேம்படுத்துவதற்காக அனைத்து பகுதிகளுக்கும் கூடுதல் கால்நடை டாக்டர்கள் தேவைப்படுகிறது. சாத்துார் அரசு ஆட்டுப்பண்ணைக்கு உடனடியாக நிரந்தர டாக்டரை நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.