/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சுக்கிரவார்பட்டி பாலத்தில் இல்லை தடுப்புச் சுவர்
/
சுக்கிரவார்பட்டி பாலத்தில் இல்லை தடுப்புச் சுவர்
ADDED : டிச 01, 2024 05:42 AM

சிவகாசி : சிவகாசி அருகே சுக்கிரவார்பட்டி ஓடையில் உள்ள பாலத்தில் தடுப்புச் சுவர் இல்லாததால் வாகன ஓட்டிகள் விபத்து அபாயத்தில் உள்ளனர்.
சிவகாசி சுக்கிரவார்பட்டி ஊருக்கு முன்பாக திருத்தங்கல் பெரியகுளம் கண்மாயிலிருந்து ஆனைக்குட்டம் அணைக்குச் செல்லும் ஓடை உள்ளது.
இந்த ஓடையின் குறுக்கே 25 மீட்டர் நீளத்திற்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் வழியாக பள்ளி கல்லுாரி மாணவர்கள் அதிக அளவில் சென்று வருகின்றனர். தவிர இப்பகுதி விவசாயிகள் விவசாயத்திற்கு தேவையான பொருட்களை பாலத்தின் வழியாகத்தான் கொண்டு செல்கின்றனர்.
இந்நிலையில் குறுகலான இந்த பாலத்தின் இருபுறமும் தடுப்புச் சுவர் இல்லை. எதிரெதிரே வரும் வாகனங்கள் விலகிச் செல்வதில் சிரமம் ஏற்படுகின்றது. இப்பகுதியில் தெரு விளக்குகளும் இல்லாததால் இரவில் பணி முடிந்து திரும்பி வருபவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மழைக்காலங்களில் ஓடையின் வழியாக அதிக அளவில் தண்ணீர் செல்லும்.
அது போன்ற காலங்களில் வாகனங்களில் செல்வோர் தடுமாறி கீழே விழுந்து மிகப்பெரிய அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே பாலத்தின் இருபுறமும் தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.