/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரோடு, வாறுகால், குடிநீர் வசதி இல்லை
/
ரோடு, வாறுகால், குடிநீர் வசதி இல்லை
ADDED : மார் 20, 2024 12:08 AM
சாத்துார் : வெம்பக்கோட்டை ஒன்றியம் தாயில்பட்டி ஊராட்சிக்குட்பட்ட மண் குண்டாம்பட்டி ஓ.பி.ஆர். நகரில் ரோடு, சாக்கடை வாறுகால் ,குடிநீர் வசதி, இன்றி குடியிருப்போர் அவதியடைந்து வருகின்றனர்.
ஓ.பி.ஆர். நகர் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் சிவா குட்டி, கணேசமூர்த்தி, கண்ணன், மகாலட்சுமி, மாரியம்மாள், துர்காதேவி, செல்வி, மாரிச்சாமி, ராமர். ஆகியோர் கலந்துரையாடியபோது:
ஒ.பி.ஆர்., நகர் உருவாகி 30 ஆண்டுகளுக்கு மேலான நிலையில் ரோடு, ,வாறுகால் ,குடிநீர் ,குழாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி அவதிப்பட்டு வருகிறோம். 300 குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில் அடிப்படை வசதிகள் இந்த பகுதியில் நிறைவேற்றி தரப்படவில்லை. கற்பக விநாயகர் தெருவில் சிறிய மழை பெய்தாலும் ரோடு முழுவதும் சகதி காடாக மாறிவிடும். இருசக்கர வாகனத்தை ரோட்டில் நிறுத்திவிட்டு வீட்டிற்கு நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.
முறையான ரோடு வசதி இல்லாததால் ஆட்டோ ,ஆம்புலன்ஸ் கூட நகருக்குள் வருவதில்லை. ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள தாயில்பட்டி, சிவகாசி ரோட்டிற்கு நடந்து சென்று பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளை வேன், பஸ் ஏற்றி அனுப்பும் நிலை உள்ளது.
ஜே.ஜே. திட்டத்தில் வீட்டிற்கு ஒரு குடிநீர் குழாய் பதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் பகுதியில் ஐந்து வீடுகளுக்கு ஒரு குடிநீர் குழாய் இணைப்பு கேட்டோம் ஊராட்சி நிர்வாகம் இன்று வரை செய்து தரவில்லை.
பத்து வீடுகள் உள்ள தெருவிற்கு கூட பேவர் பிளாக் ரோடுகள் அமைக்கப்படுகின்றன. ஆறு ஆண்டுகளுக்கு முன்பு நகர் பகுதியில் மெட்டல் ரோடு அமைத்தனர். தற்போது வரை அங்கு தார்ரோடு அமைக்கவில்லை. கற்கள் பெயர்ந்து கால்களை பதம் பார்த்து வருகிறது. குப்பை வாங்க வீட்டிற்கு ஆட்கள் வருவதில்லை. திறந்தவெளியில் குப்பை கொட்டி வருகிறோம். இதனால் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது.
மானூர் கூட்டு குடிநீர் திட்டத்தில் பம்பிங் தொட்டி எங்கள் நகருக்கு அருகிலேயே உள்ளது. ஆனால் இதிலிருந்து எங்கள் நகருக்கு குடிநீர் வழங்கவில்லை. வேறு வழியின்றி வண்டிகளில் விற்பனை செய்யப்படும் மினரல் வாட்டரை குடம் ஒன்று ரூ 12 விலை கொடுத்து வாங்கி குடிநீராக பயன்படுத்தி வருகிறோம்.
ஒவ்வொரு முறையும் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று மனு கொடுத்தால் தான் ஏதாவது ஒரு வளர்ச்சி பணி நடைபெறுகிறது. தாயில்பட்டி ஊராட்சி பெரிய ஊராட்சி ஆனால் நிதியில்லை என காரணம் கூறி வளர்ச்சிப் பணிகளை தள்ளி போட்டு வருகின்றனர். என்றனர்.

