/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விளைச்சல் இருக்கு, விலை இல்லை மக்காச்சோள விவசாயிகள் வேதனை
/
விளைச்சல் இருக்கு, விலை இல்லை மக்காச்சோள விவசாயிகள் வேதனை
விளைச்சல் இருக்கு, விலை இல்லை மக்காச்சோள விவசாயிகள் வேதனை
விளைச்சல் இருக்கு, விலை இல்லை மக்காச்சோள விவசாயிகள் வேதனை
ADDED : ஜன 18, 2024 05:30 AM

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் மீசலுார், பி.குமாரலிங்கபுரம், அழகாபுரி, கமலுார், தாதம்பட்டி, வீரசெல்லையாபுரம் பகுதிகளில் மக்காச்சோளம் அறுவடை நடந்து வருகிறது. இந்தாண்டு விளைச்சல் அதிக அளவில் கிடைத்தும், சரியான விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
மாவட்டத்தில் மீசலுார், பி.குமாரலிங்கபுரம், அழகாபுரி, கமலுார், தாதம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மானாவாரி பயிர்கள் பயிரிடப்படுகிறது. இந்தாண்டு 3000 ஏக்கர் பரப்பில் மக்காச்சோளம் நடவு செய்யப்பட்டது. வடகிழக்கு பருவமழை, காட்டு பன்றி தாக்குதலால் பாதிப்பு ஏற்பட்டது.
மக்காச்சோளம் பயிரிடுவதற்கு நிலத்தை தயார் செய்தல், விதை, மருந்து, ஆட்களுக்கு கூலி என ஒரு ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரம் செலவாகிறது. நல்ல விளைச்சல் இருந்தால் ஒரு ஏக்கருக்கு 25 மூடைகள் கிடைக்கும். விளைச்சல் குறைவாக கிடைக்கும் சமயத்தில் ஒரு ஏக்கருக்கு 10 முதல் 15 மூடைகள் மட்டுமே கிடைக்கும். இந்தாண்டு மக்காச்சோளம் பயிரிட்ட விவசாயிகளுக்கு நல்ல விளைச்சல் கிடைத்துள்ளது.
குவிண்டாலுக்கு ரூ. 2,200 என முந்தைய ஆண்டு கிடைத்த அதே தொகை தான் கிடைக்கிறது. மேலும் மக்காச்சோளம் அறுவடையில் மிஷின் கூலியாக ஒரு ஏக்கருக்கு ரூ. 2 ஆயிரம் தனியாக வழங்க வேண்டியுள்ளது. இதனால் செலவழித்த பணம் கூட திரும்ப கிடைக்காத நிலைமை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
விவசாயி முருகேசன் கூறியதாவது: முந்தைய ஆண்டை விட இந்தாண்டு நல்ல விளைச்சல் கிடைத்துள்ளது. 100 நாள் வேலை திட்டத்தால் விவசாய பணிகளுக்கு ஆட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் வேலை ஆட்களுக்கு வழங்கப்படும் கூலியும் உயர்ந்துள்ளது. எனவே கொள்முதல் செய்யும் வியாபாரிகள் குவிண்டாலுக்கு ரூ. 2500 வழங்கினால் நன்றாக இருக்கும், என்றார்.