/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
இந்தாண்டு மழை இயல்பை விட 176.75 மி.மீ., அதிகம்: 7892 ஏக்கர் வேளாண் பயிர்கள் பாழாகி சேதம்
/
இந்தாண்டு மழை இயல்பை விட 176.75 மி.மீ., அதிகம்: 7892 ஏக்கர் வேளாண் பயிர்கள் பாழாகி சேதம்
இந்தாண்டு மழை இயல்பை விட 176.75 மி.மீ., அதிகம்: 7892 ஏக்கர் வேளாண் பயிர்கள் பாழாகி சேதம்
இந்தாண்டு மழை இயல்பை விட 176.75 மி.மீ., அதிகம்: 7892 ஏக்கர் வேளாண் பயிர்கள் பாழாகி சேதம்
ADDED : டிச 19, 2024 04:19 AM
விருதுநகர்: மாவட்டத்தில் இந்தாண்டு மழை அளவு இதுவரை 996.85 மி.மீ., பதிவானது. இது இயல்பை விட கூடுதலாக 176.75 மி.மீ., அதிகம் பதிவாகி உள்ளது. வடகிழக்கு பருவ மழையால் 3492 ஏக்கர் சேதமாகி உள்ளது.
மாவட்டத்தில் இந்தாண்டு அக்டோபர் துவக்கத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியது. மக்காசோளம், சூரியகாந்தி, எள் என மானாவாரி பயிர்களை நம்பியுள்ள கரிசல் நிலம் என்பதாலும், மேற்கு தொடர்ச்சி மலையை யொட்டி உள்ள ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம் பகுதிகளில் நெல், கரும்பு விவசாயமும் நடப்பதாலும் இந்தாண்டு பெய்துள்ள மழை விவசாயத்திற்கு உதவியுள்ளது. இந்தாண்டு மே, ஆகஸ்ட் மாதங்களில் நுாறு மி.மீ.,க்கு அதிகமாகவே மழை பெய்துள்ளது. இது காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட மாற்றம் என வானியலாளர்கள் கூறுகின்றனர்.
ஏற்கனவே இந்தாண்டு மா பூக்கள் உதிர்ந்தன. இதனால் விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்தனர். வழக்கமாக விருதுநகர் மாவட்டத்திற்கு நவம்பரில் அதிகளவில் மழை பெய்யும். ஆனால் இந்தாண்டு நவம்பரில் 82.3 மி.மீ., பதிவானது. 2018ல் 81.57 மி.மீ., மழையளவு பதிவாகி உள்ளது. அதற்கு பின் 6 ஆண்டுகள் கழித்து 2024ல் தற்போது தான் நுாறுக்கும் குறைவாக மழையளவு பதிவாகி உள்ளது. 2023ல் 1156.36 மி.மீ., மழையளவு பதிவானது. அதை காட்டிலும் தற்போதைய மழையளவு குறைவு தான். இருப்பினும் பயிர் சேதம் அதிகமாக ஏற்பட்டுள்ளது. வேளாண் பயிர்கள் 3492 ஏக்கருக்கும், தோட்டக்கலை பயிர்கள் 4400 ஏக்கருக்கும் என 7892 ஏக்கர் சேதமானது.
நீர்வளத்துறையின் 342 கண்மாய்களில் 38 கண்மாய்கள் நுாறு சதவீதம் நிரம்பி உள்ளன. 75 முதல் 99 சதவீதத்தில் 58 கண்மாய்களும், 50 முதல் 75 சதவீதத்தில் 53 கண்மாய்கள், 26 முதல் 50 சதவீதத்தில் 140 கண்மாய்கள், 25 சதவீதம் வரை 53 கண்மாய்களும் நிரம்பி உள்ளன. எந்த கண்மாயும் நிரம்பாமல் இல்லை.
பிளவக்கல் பெரியாறு அணையின் மொத்த நீர்மட்டம் 47.56 அடிக்கு தற்போது 35.99 அடி உள்ளது. கோவிலாறு 42.65 அடிக்கு 27.03 அடி உள்ளது. சாஸ்தாகோவில் நீர்தேக்கத்தில் 32.81 அடிக்கு 32.81 அடி உள்ளது. கோல்வார்பட்டி அணையில் 18 அடிக்கு 15.51அடியும், ஆனைக்குட்டம் அணையில் 24.60 அடிக்கு 10.13 அடியும், குல்லுார்சந்தை அணையில் 8.03 அடிக்கு 7.70அடியும், இருக்கன்குடி அணையில் 22 அடிக்கு 20.60 அடியும், வெம்பக்கோட்டை 23 அடிக்கு 21.32 அடியும் நீர்மட்டம் உள்ளது.
பாக்ஸ் மேட்ட/ர் ராஜபாளையத்தில் 9.2 செ.மீ., மழை
தமிழகத்தில் நேற்று வேறு எந்த பகுதியில் பெரிய அளவில் கன மழை இல்லாத சூழலில் அதிகபட்சமாக ராஜபாளையத்தில் 9.2 செ.மீ., மழையளவு பதிவானதாக பேரிடர் மேலாண்மை துறையினர் தெரிவித்தனர். ஸ்ரீவில்லிபுத்துாரில் 7.2 செ.மீ., மழையும், வத்திராயிருப்பில் 5.1 செ.மீ., மழையும் பதிவானது.

