/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பத்திரப்பதிவு சர்வர் பழுது பதிவுக்கு வந்தவர்கள் ஏமாற்றம்
/
பத்திரப்பதிவு சர்வர் பழுது பதிவுக்கு வந்தவர்கள் ஏமாற்றம்
பத்திரப்பதிவு சர்வர் பழுது பதிவுக்கு வந்தவர்கள் ஏமாற்றம்
பத்திரப்பதிவு சர்வர் பழுது பதிவுக்கு வந்தவர்கள் ஏமாற்றம்
ADDED : அக் 08, 2025 02:48 AM
விருதுநகர்:தமிழகத்தில் செப். 29 முதல் பத்திரப்பதிவுத்துறையின் சர்வர் முடங்கி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆயுத பூஜை விடுமுறைக்கு பின் அக்., 3லும், சனி, ஞாயிறு முடிந்து அக்., 6, 7 தேதிகளிலும் சர்வர் பிரச்னை ஏற்பட்டது. பத்திரப்பதிவு செய்ய வந்த பலர் பதிவு செய்ய முடியாமல் திரும்பினர்.
தமிழக அரசின் பத்திரப்பதிவு துறை அரசுக்கு வருவாய் ஈட்டி தருவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. வீடு, நிலம் வாங்கும்போது, வீடு கட்டுமான ஒப்பந்தம், குத்தகை பத்திரம், கிரயம், தானம், செட்டில்மென்ட் ஆகியவற்றை பதிவு செய்ய மக்கள் பணம் செலுத்தி முத்திரைத்தாள் வாங்குவர். முத்திரைத்தாள் கட்டணம் மூலமாக அரசின் கருவூலத்துக்கு தேவையான அதிக வரி கிடைக்கும்.
சுபமுகூர்த்த நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடக்கும் என்பதால் அன்று பதிவுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படும். செப்., 29 முதலே சர்வர் பிரச்னை ஏற்பட்டது. இந்நிலையில் செப்., 30 துர்காஷ்டமி என்பதால் பலர் பதிவு செய்ய வந்தனர். சர்வர் கோளாறால் பதிவு செய்ய முடியவில்லை. அக்., 1, 2 ஆயுத பூஜை விடுமுறை. அக்., 3லும் இதே போல் சர்வர் பிரச்னை தொடர்ந்தது. நான்காவது நாளாக நேற்று முன்தினமும் பிரச்னை ஏற்பட்டது. இதனால் குறைந்த நபர்களே பதிவு செய்தனர். நேற்றும் சர்வர் பிரச்னையால் பலர் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
இந்தாண்டு செப்., 4ல் நடந்த பதிவின் போது அரசு ரூ.274 கோடி வருவாய் ஈட்டி பதிவுத்துறை சாதனை படைத்திருந்தது. இந்நிலையில் தொடரும் சர்வர் பிரச்னை அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்துவதுடன் மக்களும் தங்கள் சொத்துக்களை நன்னாளில் பதிய முடியாமல் திண்டாடுகின்றனர்.
வரும் நாட்களில் தேய்பிறை உள்ளதால் இனி பத்திரப்பதிவு செய்வோர் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது. அடிக்கடி ஏற்படும் இந்த சர்வர் பிரச்னையை தீர்க்க மண்டலங்களாக பிரித்து ஒவ்வொரு மண்டலத்திற்கும் என தனித்தனி சர்வர் ஏற்பாடு செய்ய வேண்டும் பத்திர எழுத்தர்கள் சங்கம் வலியுறுத்தி வருகிறது.