/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தரமான தீபாவளி பலகாரம் தயாரிக்க அறிவுரை
/
தரமான தீபாவளி பலகாரம் தயாரிக்க அறிவுரை
ADDED : அக் 18, 2024 04:48 AM
விருதுநகர்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பலகாரம் தயாரிப்பவர்கள் சட்டத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு தரமான உணவுப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்ய வேண்டும் என கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது: அனைத்து உணவு தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் உணவு பாதுகாப்புத்துறையில் பதிவு செய்து பதிவுச் சான்றிதழ், உரிமம் பெற்ற பின்பே உணவு பொருட்களை தயாரித்து விற்பனை செய்ய வேண்டும்.
இனிப்பு, காரவகை, பேக்கரி பொருட்கள் தயாரிப்பாளர்கள், தரமான கலப்படமில்லாத மூலப்பொருட்களை கொண்டு சுகாதாரமான முறையில் தயாரித்து, பாதுகாப்பான உணவு பொருட்களை மக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும். அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமான நிறமிகளை சேர்க்கக் கூடாது.
தரமான நெய், எண்ணெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும், மீண்டும் சூடுபடுத்தி பயன்படுத்தக் கூடாது.
தடை பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது.தயாரிக்கப்பட்ட உணவு பொருட்கள் ஈக்கள், பூச்சிகள், கிருமித்தொற்று ஏற்படாத வகையில் சுத்தமான சுகாதாரமான சூழலில் வைத்து மக்களுக்கு விற்பனை செய்யப்பட வேண்டும்.
உடனடியாக http://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் இந்திய உணவு பாதுகாப்பு, தரங்கள் சட்டத்தின் 2006ன் கீழ் தங்களது வணிகத்தை உரிமம் அல்லது பதிவு செய்து கொள்ள வேண்டும்.திருமண மண்டபம், தனியார் கட்டட உரிமையாளர்கள் பண்டிகை கால பலகார தயாரிப்பிற்கு கட்டடத்தை வாடகைக்கு விடும் போது தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் உணவு பாதுகாப்புத் துறையில் உரிமம், பதிவுச் சான்று பெற்றிருப்பதை உறுதி செய்த பின்பே வாடகைக்கு இடத்தை வழங்க வேண்டும்.
உணவுப் பொருள் கலப்படம் குறித்தோ புகார்கள் ஏதேனும் இருப்பின் 94440 42322 என்ற மாநில உணவு பாதுகாப்பு துறையின் வாட்ஸ் அப் எண்ணிற்கோ அல்லது 04562 - 252 255 என்ற மாவட்ட உணவு பாதுகாப்பு துறையின் அலுவலக தொலைபேசி எண்ணிற்கோ தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம், என்றார்.