விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த பல லட்சம் மக்கள் சென்னையில் வசித்து வருகின்றனர். இவர்கள் சென்னை சென்று வர வசதியாக செங்கோட்டையிலிருந்து சென்னை எழும்பூருக்கு இயங்கும் கொல்லம் எக்ஸ்பிரஸ், பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில்கள் தினசரி இயங்கி வருகிறது. இது தவிர சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் வாரத்தில் மூன்று நாட்களும், தாம்பரம்- கொச்சுவேலி, தாம்பரம்- திருநெல்வேலி சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகிறது.
செங்கோட்டை -விருதுநகர் வழித்தடத்தில் எத்தனை ரயில்கள் இயக்கினாலும் வெயிட்டிங் லிஸ்ட் நிலை ஏற்பட்டு வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது. எனவே, இந்த வழித்தடத்தில் கூடுதலாக ஒரு எக்ஸ்பிரஸ் ரயில் தினமும் சென்னைக்கு இயக்க வேண்டுமென விருதுநகர் மாவட்ட மக்கள் கோரி வந்தனர்.
இந்நிலையில் 2013 முதல் சென்னையிலிருந்து காரைக்குடிக்கு வாரம் இருமுறை இயங்கிய சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் பின்னர் மானாமதுரை வரை நீட்டிக்கப்பட்ட நிலையில் விருதுநகர் மாவட்ட மக்களின் கோரிக்கையை ஏற்று 2017 மார்ச் முதல் செங்கோட்டை வரை நீட்டிக்கப்பட்டு தற்போது வரை வாரம் மூன்று முறை இயங்கி வருகிறது.
ஆனால், அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையினால் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலை தினசரி ரயிலாக இயக்க வேண்டுமென விருதுநகர் மாவட்ட மக்கள், கடந்த 8 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும், தெற்கு ரயில்வே நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆனால் கொல்லத்திலிருந்து செங்கோட்டை வரை அகல ரயில் பாதையாக மாற்றம் செய்யப்பட்ட பிறகு விருதுநகர் மாவட்டத்தின் வழியாக கொல்லம் -சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் 2019 முதல் தினசரி ரயில் சேவையாக இயங்கி வருகிறது. இதனால் கேரள மக்கள் பயன் அடைந்து வருகின்றனர்.
ஆனால், 2013ல் சென்னை காரைக்குடி இடையே வாரம் இருமுறை இயங்கிய சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் செங்கோட்டை வரை நீட்டிக்கப்பட்டு தற்போது வரை வாரம் மூன்று முறை தான் இயங்கி வருகிறது.
தற்போது விருதுநகர் மாவட்டத்தின் வழியாக சென்னைக்கு இயங்கும் ரயில்களில் வெயிட்டிங் லிஸ்ட் நிலையே காணப்படுவதால் விருதுநகர் மாவட்ட மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இதனை தவிர்க்க சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலை தினசரி ரயிலாக இயக்க வேண்டும். இதற்கு விருதுநகர் மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாகும்.