ADDED : ஜன 04, 2024 01:45 AM
விருதுநகர்; விருதுநகர் மாவட்டத்தின் நகர், ஊரகப்பகுதிகளில் செயல்படும் கல் குவாரிகள் இருந்து லாரிகள் அளவிற்கு அதிகமான கற்களை ஏற்றிக்கொண்டு செல்கின்றன. இதனால் பிற வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணிக்க வேண்டியுள்ளது.
மாவட்டத்தின் நகர், புறநகர், ஊரகப்பகுதிகளில் செயல்படும் கல் குவாரிகளில் இருந்து வெட்டி எடுக்கப்படும் கற்கள் லாரிகள் மூலம் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும், மற்ற மாவட்டங்களுக்கும் கொண்டு செல்லப்படுகின்றன. கற்களின் தேவை அதிகரிப்பால் லாரிகளின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது.
இப்படி செல்லும் லாரிகள் அளவிற்கு அதிகமான கற்களை சுமந்து செல்கின்றன. இவை நகர் பகுதியில் வரும் போது அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை, அபராதம் விதிக்கின்றனர்.
ஆனால் புறநகர், ஊரகப்பகுதிகளில் அளவிற்கு அதிகமான கற்களை கொண்டு செல்லும் போது எவ்வித சோதனையும் செய்வதில்லை. இதனால் இதே வழியில் செல்லும் டூவீலர், ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்களில் செல்வபவர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது.
அதிக பாரத்துடன் லாரிகள் தொடர்ந்து, அதிக எண்ணிக்கையில் ஊரகப்பகுதிகளில் செல்வதால் புதியதாக அமைக்கப்பட்ட ரோடுகள் சேதமடைந்துள்ளது.
மழைக்காலங்களில் மண்ரோடாக இருக்கும் பகுதிகள் வழியாக செல்லும் போது டயர் பதிந்து மற்ற வாகனங்கள் செல்லத்தடை ஏற்படுகின்றது.
மேலும் இவ்வழியாக செல்லும் லாரிகளின் போக்குவரத்து அதிகரிப்பால் மக்கள் அச்சத்துடன் ரோட்டை கடக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன விபத்துக்களும் அடிக்கடி நடக்கிறது.
எனவே புறநகர், ஊரகப்பகுதிகள் வழியாக அதிக கற்களை ஏற்றிச் செல்லும் லாரிகளை, அதிகாரிகள் தொடர் சோதனை செய்து அதிக பாரத்துடன் செல்வதை கட்டுப்படுத்த வேண்டும்.