/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
செப்பனிடாத ரோடு, எரியாத தெருவிளக்குகள்
/
செப்பனிடாத ரோடு, எரியாத தெருவிளக்குகள்
ADDED : ஜூலை 27, 2025 03:51 AM

சாத்துார்: துார்வாராத வாறுகால், பள்ளமான ரோடு, எரியாத தெருவிளக்குகள் என பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி புதுப்பாளையத்தில் மக்கள் அவதிப்படுகின்றனர்.
சாத்துார் ஊராட்சி ஒன்றியம் அயன் சத்திரப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட புதுப்பாளையத்தில் சங்கரேஸ்வரி தெருவில் மட்டுமே பேவர் பிளாக் ரோடு போடப்பட்டுள்ளது. மற்ற தெருக்களில் மெட்டல் ரோடு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மெட்டல் ரோடு அமைக்கப்பட்டு பல மாதங்கள் ஆவதால் கற்கள் பெயர்ந்து கரடு முரடாகவும் குண்டு குழியுமாக உள்ளது. புதுப்பாளையம் முதல், இரண்டாவது தெருக்களில் முற்றிலுமாக ரோடு வசதி இல்லை. மேலும் ரோட்டில் கழிவுநீர் செல்வதால் துர்நாற்றமும் தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது.
சிறிய மழை பெய்தாலும் பாதை முழுவதும் சேறும் சகதியுமாக மாறி விடுகிறது. இருசக்கர வாகன ஓட்டிகள் வழுக்கி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். தெரு விளக்கு அடிக்கடி பழுதாகி விடுகிறது. இதனால் இரவு நேரத்தில் நகர் பகுதி இருளில் மூழ்குகிறது. இரவு நேரத்தில் இப்பகுதி மக்கள் அலைபேசியில் உள்ள டார்ச் லைட் வெளிச்சத்தில் நடமாடும் நிலை உள்ளது. புதுப்பாளையத்தில் பொது கழிப்பறை வசதி இல்லாததால் மக்கள் திறந்த வெளியை நாடுகின்றனர். இதனால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது.
ரோடு வசதி தேவை பரமசிவம், தனியார் நிறுவன ஊழியர்: முதல் இரண்டு தெருக்களிலும் முறையான ரோடு வசதி இல்லை. பாதை மண் பாதையாக உள்ளது. சிறிய மழை பெய்தாலும் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்குவதால் ரோடு சேறும் சகதியுமாக மாறிவிடுகிறது. இருசக்கர வாகனத்தை வீட்டிற்கு கொண்டு வர முடியாமல் ரோட்டில் நிறுத்திவிட்டு வரும் நிலை உள்ளது. ரோடு போட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தெரு விளக்கு இல்லை ஆனந்தராஜ், குடும்பத் தலைவர்: முக்கியமான சந்திப்புகளில் மட்டுமே தெரு விளக்கு வசதி உள்ளது. குறுக்குத் தெருக்களில் தெருவிளக்கு வசதி இல்லை.இரவு நேரத்தில் விஷப்பூச்சிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் மக்கள் வெளியே நடமாட அஞ்சுகின்றனர்.வீட்டில் குப்பை வாங்குபவர்கள் ஊருக்கு வெளியே சென்று குப்பையை கொட்டாமல் சாலை ஓரத்தில் கொட்டி தீ வைப்பதால் குடியிருப்புக்குள் புகை சூழ்ந்து மக்கள் அவதிப்படுகின்றனர்.
வாறுகால் சுத்தம் செய்வதில்லை முனியம்மாள், புதுப் பாளையம்: தெருவில் உள்ள வாறுகாலில் குப்பை கழிவுகள் அதிக அளவில் தேங்கி கிடக்கிறது. அதனை சுத்தம் செய்ய பணியாளர்கள் வருவதில்லை. முதல் மற்றும் இரண்டாம் தெருக்களில் கழிவு நீர் தேங்குகிறது. ரோடு வசதியில்லை. மழைக்காலத்தில் நடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகிறோம். ரோடு போட நடவடிக்கை எடுக்க வேண்டும்.