/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
லாரிகளில் பாதுகாப்பு இன்றி கட்டுமான பொருட்கள்
/
லாரிகளில் பாதுகாப்பு இன்றி கட்டுமான பொருட்கள்
ADDED : அக் 20, 2024 06:33 AM

அருப்புக்கோட்டை,: அருப்புக்கோட்டை காந்தி நகர் அதிக போக்குவரத்து நிறைந்த பகுதியாகும். திருச்சுழி, நரிக்குடி, சாயல்குடி, ராமநாதபுரம் மற்றும் நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு இந்த பகுதி வழியாகத்தான் செல்ல வேண்டும். இதனால் தினமும் ஆயிரத்திற்கு மேற்பட்ட வாகனங்கள் வந்து செல்கிறது.
இது தவிர பள்ளி, கல்லூரி வாகனங்கள் தினமும் 100 வாகனங்களுக்கு மேல் மாணவர்களை ஏற்றி இறக்கி செல்கிறது. காந்தி நகர் வழியாக செல்லும் திருச்சுழி ரோட்டில் பகல் இரவு பாராது கனரக வாகனங்கள் மூலம் எந்த வித பாதுகாப்பு இன்றியும் மூடாமலும் கற்கள், ஜல்லி, மணல் எம். சாண்ட் உட்பட கட்டுமான பொருள்களை கொண்டு செல்லப்படுகின்றன.
காந்தி நகர் சந்திப்பில் உள்ள வேகத்தடையில் ஏறி இறங்கும் பொழுது கற்கள் விழும் அபாயம் உள்ளது. அந்த வழியாக டூவீலரில் செல்பவர்கள் பயந்து கொண்டே செல்ல வேண்டி உள்ளது. மேலும் காற்றில் எம் சாண்ட், தூசுமண், பறந்து வாகன ஓட்டிகளின் கண்களை பதம் பார்க்கிறது.
நூற்றுக்கணக்கான கனரக வாகனங்கள் இந்த வழியாக பாதுகாப்பு இல்லாமல் தளவாட பொருட்களைக் கொண்டு செல்வதை போக்குவரத்து போலீசார், வருவாய் துறையினர் கண்டு கொள்வதில்லை. மாவட்ட நிர்வாகம் இது குறித்து நடவடிக்கை எடுத்து குறிப்பிட்ட நேரத்தில் தான் கனரக வாகனங்கள் நகருக்குள் வந்து செல்ல வேண்டுமென அறிவுறுத்த வேண்டும்.