/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
350 சத்துணவு மையங்களில் காய்கறி தோட்டங்கள்
/
350 சத்துணவு மையங்களில் காய்கறி தோட்டங்கள்
ADDED : ஆக 14, 2025 11:23 PM

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் 350 சத்துணவு மையங்களில் காய்கறி தோட்டங்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் அரசு துவக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் சத்துணவு மையங்கள் செயல்படுகின்றன. இவற்றில் மாணவர்களுக்கு இயற்கை மீதான ஆர்வத்தை அதிகரிக்கவும், மாதம் ஒரு முறை தோட்ட பராமரிப்பு பணியில் ஈடுபடுத்தி அவர்களின் தேர்வு, படிப்பு தொடர்பான மன இறுக்கத்தை தளர்த்தும் வகையில் காய்கறி தோட்டங்கள் ஏற்படுத்த கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் உத்தரவிடப்பட்டது.
இத்திட்டம் துவக்கத்தில் பலர் பின்பற்றினர். அதன் பின் பெரிதாக காணாமல் போனது. இந்நிலையில் இத்திட்டம் மீண்டும் புத்துயிர் பெற்று செயல்படுத்தப்படுகிறது. இதற்காக மாவட்டத்தில் 350 சத்துணவு மையங்களில் காய்கறி தோட்டங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.
விருதுநகர் பட்டம்புதுார் அரசு உயர்நிலைப்பள்ளியில் காய்கறி, கீரை தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இதை சத்துணவு அலுவலர்கள் பார்வையிட்டுள்ளனர். இதை முன்னுதாரணமாக எடுத்து தேர்வு செய்யப்பட்ட மையங்களிலும் செய்ய வழிகாட்டுதல் வழங்கப்பட்டு வருகிறது.
இதில் கிடைக்கும் காய்கறிகளை அப்படியே சத்துணவில் பயன்படுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது மாணவர்களுக்கு உளவியல் ரீதியில் நல்ல மாற்றத்தை தருவதாக ஏற்கனவே அமைத்த பள்ளி ஆசிரியர்கள் கூறுகின்றனர்.