/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
3500 பணியிடங்கள் நிரப்பப்படாததால் கிராம சுகாதார செவிலியர்கள் விரக்தி
/
3500 பணியிடங்கள் நிரப்பப்படாததால் கிராம சுகாதார செவிலியர்கள் விரக்தி
3500 பணியிடங்கள் நிரப்பப்படாததால் கிராம சுகாதார செவிலியர்கள் விரக்தி
3500 பணியிடங்கள் நிரப்பப்படாததால் கிராம சுகாதார செவிலியர்கள் விரக்தி
ADDED : செப் 18, 2024 09:28 PM
விருதுநகர்:அரசு ஆரம்ப, துணை சுகாதார நிலையங்களில் 3500 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளன. இதனால் அவர்கள் பணிச்சுமை அதிகமாகி மன அழுத்தத்தில் உள்ளனர்.
தமிழகத்தில் 8770 சுகாதார நிலையங்கள் உள்ளன. இதில் 5 ஆயிரம் மக்கள் தொகைக்கு ஒரு கிராம சுகாதார செவிலியர் என்ற அடிப்படையில் பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டது. மேலும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு அரசின் மூலம் பயிற்சி வழங்கப்பட்டு முன்னுரிமை அடிப்படையில் கிராம சுகாதார செவிலியராக பணியமர்த்தப்பட்டனர். 3500 பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன.
இந்நிலையில் அங்கீகரிக்கப்பட்ட மையங்களிலிருந்து டிப்ளமோ நர்சிங் பயிற்சி பெற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்க வேண்டும் என அங்கன்வாடி பணியாளர்களின் பதவி உயர்வு நிறுத்தப்பட்டது. இதனால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்நிலையில் கிராம சுகாதார செவிலியர் பணியிடங்கள் எம்.ஆர்.பி., மூலம் நிரப்பப்படும் எனவும், முதற்கட்டமாக 2800 பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்து 3 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இதுவரை நிரப்பப்படவில்லை. இதனால் தற்போது ஒரு கிராம சுகாதார செவிலியர் கூடுதலாக நான்கு, ஐந்து சுகாதார நிலையங்களை சேர்த்து பார்க்க வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
களப்பணி, கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி, பரிசோதனை என தொடர் கூடுதல் பணிச்சுமையால் மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர். கோவை, திருப்பூர் உட்பட பல மாவட்டங்களில் 30 முதல் 50 ஆயிரம் மக்கள் தொகைக்கு ஒரு கிராம சுகாதார செவிலியர் என்ற நிலையில் பணிபுரிகின்றனர்.
கிராம சுகாதார செவிலியர்கள் கூறியதாவது:
ஒவ்வொரு முறையும் போராட்டம் நடத்தும் போதும் துறை அமைச்சர் விரைவில் பணியிடங்கள் நிரப்பப்படும் என தெரிவிக்கிறார். ஆனால் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி தட்டி கழிக்கின்றனர். மேலும் கூடுதல் பணிச்சுமையால் பல செவிலியர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கன்வாடி பணியாளர்களிடம் பேசி வழக்கை முடித்து செவிலியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.