நரிக்குடி: நரிக்குடி பகுதியில் கிராம இணைப்பு ரோடுகளை நீடித்து உழைக்கும்
வகையில் தரமானதாக அமைக்க வேண்டும்.நரிக்குடி ஒன்றியத்தில் 44 ஊராட்சிகளில்
176 கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் பெரும்பான்மையான இணைப்பு ரோடுகள்
போடப்பட்டு பல ஆண்டுகள் ஆகி விட்டன. தற்போது இந்த ரோடுகள்
போக்குவரத்திற்குப் பயனற்ற வகையில், குண்டும் குழியுமாக உள்ளன. உலக்குடி
அத்திகுளம் உளுத்திமடை, கொட்டகாச்சியேந்தல் கணையமறித்தான், நரிக்குடி
மெயின் ரோட்டிலிருந்து ஆண்டியேந்தல் செல்லும் ரோடு, நரிக்குடி மானூர் ரோடு
சீனிக்காரனேந்தல் கிளவிகுளம் கீழக்குன்றைக்குளம் ரோடு உள்ளிட்ட பல்வேறு
இணைப்பு ரோடுகள் மோசமாக உள்ளன. இந்த ரோடுகளில் வரும் வாகனங்கள் அடிக்கடி
சேதமடைகின்றன. இதனால் போக்குவரத்திற்கு வழியின்றி மக்கள்
சிரமப்படுகின்றனர்.
விடத்தகுளத்திலிருந்து அகத்தாகுளம் வரையிலான நான்கு கி.மீ., தூரம் ரோடு
மோசமாக இருந்ததால், இங்கு ரோட்டில் ஜல்லி கற்கள் மற்றும் கிராவல்
போடப்பட்டன.
தற்போது இதன் கற்கள் பெயர்ந்து போக்குவரத்திற்கு பயனற்ற நிலையில் உள்ளது.
நரிக்குடி ஒன்றியத்தில் இது போன்ற மோசமான இணைப்பு ரோடுகளை சீரமைத்து,
நீடித்து உழைக்கும் வகையில் தரமானதாக அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க
வேண்டும்.