/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அதிகாரிகள் அசட்டையால் தொடரும் பட்டாசு விபத்துக்கள்
/
அதிகாரிகள் அசட்டையால் தொடரும் பட்டாசு விபத்துக்கள்
அதிகாரிகள் அசட்டையால் தொடரும் பட்டாசு விபத்துக்கள்
அதிகாரிகள் அசட்டையால் தொடரும் பட்டாசு விபத்துக்கள்
ADDED : ஆக 21, 2011 01:51 AM
விருதுநகர் மாவட்டத்தில் தான் பட்டாசு, தீப்பெட்டி தயாரித்தல் தொழில் அதிகம் நடந்து வருகிறது.
இதனால் இங்கு விபத்துக்களுக்கும் பஞ்சம் இல்லை. இதற்கு காரணமே பட்டாசு ஆலைகளின் விதி முறை மீறல்கள்தான். வேதிப்பொருட்களை கையாள்வதில் முறையான விழிப்புணர்வு இல்லாததால், விபத்துக்களும் தொடர்கின்றன. பல பட்டாசு ஆலைகளில் முதலுதவி வசதிகள் கூட இல்லை. திறந்த வெளியில் தயாரிப்பது, அறையில் கூடுதல் நபர்கள் பணியாற்றுவது, தரையில் ரப்பர் சீட் அமைக்காதது, காட்டன் உடைகள் அணியாதது, இரவிலும் பட்டாசு தயாரிப்பு போன்ற விதி மீறல்களை குறைத்தாலே, விபத்துக்களை ஓரளவு குறைக்கலாம், உயிர்பலியையும் தவிர்க்கலாம். பட்டாசு திரி, சிறு ரக பட்டாசுகள் குடிசைத்தொழில் போல் முறைகேடாக வீடுகளில் நடக்கிறது. இதை அனைத்தும் தெரிந்தும், அதிகாரிகள் கண்டு கொள்ளாததுதான் வேதனையான விசயம். தினம் ஒரு பட்டாசு ஆலை புதிதாக துவங்கும் நிலையில், இதை கட்டுப்படுத்த முறையான நடவடிக்கையும் இல்லை. விபத்து நடந்தால், மீட்பு வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலையில்தான், பெரும்பாலான ஆலைகள் செயல்படுகின்றன. இது போன்ற ஆலைகளுக்கு எப்படிதான் அதிகாரிகள் அனுமதி வழங்கினார்களோ...? இனியாவது, பட்டாசு ஆலை உரிமம் புதுப்பிக்கும் போது, ஆலைகளை நேரடியாக ஆய்வு செய்து, வசதிகள் கொண்ட ஆலைகளுக்கு மட்டுமே, உரிமம் புதுப்பித்து வழங்க வேண்டும். இது போன்ற நடைமுறைகளை முறையாக கடைபிடித்தால்தான் வரும் காலங்களில் விபத்துக்களை குறைத்து, உயிர்பலியையும் தடுக்க முடியும். இது தொடர்பாக பலரின் ஆதங்கம்: எம்.கார்த்திகேயன் (விருதுநகர்): பட்டாசு தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு, பயிற்சி வழங்கவேண்டும். அரசு விதி முறைகளையும் ஆலைகள் கடைபிடிக்க வேண்டும். விபத்தில் சிக்குபவர்களை பாதுகாக்க, முதல் தர சிகிச்சை பிரிவை ஆஸ்பத்திரிகளில் ஏற்படுத்த வேண்டும். பட்டாசு ஆலை கட்டட மேற்கூரையில் தண்ணீர் டேங்க் அமைத்து தண்ணீரை சேமித்து வைக்க வேண்டும். இது அறையை வெப்பமாகாமல் தடுக்கும் . காளிராஜன்(ராஜபாளையம்): அதிகாரிகள் சரியான முறையில் ஆய்வு செய்வது இல்லை. தீபாவளி சீசனில் விபத்துகள் அதிகம் நடக்கின்றன. ஆலைகளில் வெடிபொருள் கலவை குறித்து, தமிழில் பெரியதாக எழுதி வைக்கவேண்டும். இதை பார்த்து ஊழியர்கள் சரியான முறையில் செயல்படுவர். திறந்த வெளியில் வேலை பார்ப்பதை தவிர்க்கவேண்டும். சிவகாசியில் உள்ள சோதனை தரம் அறியும் ஆய்வுக் கூட செயல்பாட்டை தீவிரப்படுத்தவேண்டும்.விஜயகுமார் (சிவகாசி): வேதி பொருட்களின் பெயர், அதன் வீரியம், செயல்பாடு பற்றி தெரியாமல், ஏதோ அனுமானத்தில் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். பட்டாசு ஆலைகளில் பி.எஸ்.சி.,வேதியல் படித்தவரையே, சேப்டி அலுவலராக நியமிக்க வேண்டும். வீடுகளில் 5 வயது குழந்தை பட்டாசு வேலை செய்கிறது. இது தடுக்க வேண்டும். ஆலைகளில் அனுமதிக்கப்பட்ட பட்டாசு ரகங்களை மட்டுமே செய்ய வேண்டும். சில தொழிலாளர்கள் பெரிய ஆலைகளில் வேலை செய்து விட்டு, மற்றொரு இடத்தில் இரவு 8 மணி வரை பட்டாசு தயாரிப்பில் ஈடுபடுகின்றனர். தொடர்ந்து உழைக்கும் அசதியும், விபத்திற்கு வழிவகுக்கிறது. ராஜேஸ்வரி (திருத்தங்கல்): பல ஆலைகளில் ஒப்பந்த அடிப்படையில் வேலை நடக்கிறது. 4 பேர் வேலை செய்ய வேண்டிய ஒரு அறையில் 20 பேர் வேலை செய்கின்றனர். பட்டாசு உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் அவசரகதியில் வேலை செய்யும் போது விபத்து நடக்கிறது. உயிர்பலி ஏற்படுகிறது. பணத்தாசை காட்டி தொழிலாளர்களை கூடுதல் வேலை வாங்குவதாலும் விபத்து நேரிடுகிறது. இதை தடுக்க வேண்டும்.மாணிக்கவாசகம்(ஸ்ரீவில்லிபுத்தூர்): பட்டாசு தயாரிப்பில் பாஸ்பரஸ் வந்த பின் தான் அதிக வெடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. மிச்சப்படுத்தும் நடவடிக்கையால், கெமிக்கல் கலவை முழுவதையும் அன்றே பயன்படுத்தாமல், மறுநாள் வரை சேமித்து வைக்கின்றனர். இதனாலே விபத்து ஏற்பட்டு, உயிரிழப்பு ஏற்படுகிறது. பட்டாசு தயாரிப்புகளை வீடுகளில் செய்யாமல், அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் செய்ய வேண்டும்.எஸ்.பார்த்திபன் (ஏழாயிரம்பண்ணை) : அறை ஒன்றிற்கு நான்கு வாசல்கள்தான் இருக்க வேண்டும். பட்டாசு அறைக்குள் பித்தளையிலான சட்டி, குச்சி, கத்தி போன்ற பொருட்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.இரும்பு பொருட்களை பயன்படுத்தக்கூடாது. இரும்பு கத்தியானது தரையில் கிடக்கும் சீனிக்கல்லுடன் உராய்ந்தால் தீவிபத்து ஏற்படும். பட்டாசு கழிவுகளை, ஆலையில் இருந்து ஒரு கி.மீ., தூரத்தில், 10 அடி பள்ளம் தோண்டி, பயிற்சி பெற்றவர்களை கொண்டு அழிக்க வேண்டும். சுப்புராஜ் (சாத்தூர்) : தீபாவளி சீசன் என்பதால், லாப நோக்கில் ஒப்பந்த அடிப்படையில் வேலை கொடுக்கின்றனர். இதனால் இரவு, பகல் பாராமல் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். பட்டாசு தொழிலாளர்களுக்கு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, விபத்தின்றி பட்டாசு தயாரிப்பது குறித்த பயிற்சி வகுப்பு நடத்த, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆ.கிருஷ்ணமூர்த்தி (அருப்புக்கோட்டை):அரசு அனுமதி இல்லாமல் தான் பட்டாசு தொழில் செய்யபடுகிறது. இதற்கான பாதுகாப்பு உபகரணங்களை அரசு வழங்க வேண்டும். அதிகாரிகளும் அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும்.
நமதுநிருபர் குழு