/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மனவளர்ச்சி குன்றியோர் உதவித் தொகைக்கு காத்திருப்பு
/
மனவளர்ச்சி குன்றியோர் உதவித் தொகைக்கு காத்திருப்பு
மனவளர்ச்சி குன்றியோர் உதவித் தொகைக்கு காத்திருப்பு
மனவளர்ச்சி குன்றியோர் உதவித் தொகைக்கு காத்திருப்பு
ADDED : டிச 02, 2024 07:11 AM
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் மன வளர்ச்சி குன்றியோர், அவர்களை பராமரிக்கும் பாதுகாவலர்கள் என 499 பேர் உதவித் தொகை கோரி மனு அளித்தும் கிடைக்காமல் பல மாதங்களாக காத்திருக்கின்றனர்.
மாவட்டத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் இருந்த போதும், அதில் வெறும் 8 ஆயிரம் பேருக்குத் தான் உதவித் தொகை வழங்கப்படுகிறது என்ற அதிர்ச்சியான உண்மை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் வெளி வந்துள்ளது. விருதுநகரைச் சேர்ந்த ஜெயக்குமார், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலகத்திற்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மொத்த மாற்றுத்திறனாளிகள், உதவி தொகை பெறுவோர் விவரம், மன வளர்ச்சி குன்றியோரில் எத்தனை பேருக்கு உதவி தொகை செல்கிறது என்ற கேள்விகளை கேட்டுள்ளார்.
இதில் மாவட்டத்தில் மொத்தமுள்ள மாற்றுத் திறனாளிகளின் எண்ணிக்கை 41752 பேர் எனவும், அதில் அரசின் சார்பில் உதவித் தொகை பெறுவோர் வெறும் 8005 பேர் எனவும் பதில் தரப்பட்டுள்ளது. மேலும், மனவளர்ச்சி குன்றியோருக்கான பராமரிப்பு உதவித் தொகை கோரி விண்ணப்பித்துள்ளோர் எத்தனை பேர் என்ற கேள்விக்கு, 344 பேர் மனு அளித்தும் உதவித் தொகை கிடைக்காமல் காத்து கிடக்கின்றனர் என்ற பதில் வழங்கப்பட்டுள்ளது.
இதேபோல் மனவளர்ச்சி குன்றியோரை பராமரிக்கும் பாதுகாவலருக்கான உதவித் தொகைக்காக எத்தனை பேர் மனு அளித்து காத்துகிடக்கின்றனர் என்ற கேள்விக்கு, 155 பாதுகாவலர்கள் உதவித் தொகை கிடைக்காமல் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர் எனவும் விபரம் தந்துள்ளனர். அரசானது, மாற்றுத் திறனாளிகளின் நலன்களுக்காக சலுகைகளை வழங்கி வருவதாக கூறிவருகிறது. இந்நிலையில் மாவட்டத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வெளியான விபரங்கள் அதிருப்தியை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
உடனடியாக மனு அளித்து காத்திருக்கும் மனவளர்ச்சி குன்றியோர், பாதுகாவலர்களுக்கு உதவித் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உதவித் தொகை கிடைக்காமல் உள்ள அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு இடங்களில் முகாம்கள் நடத்தி விரைவில் உதவித் தொகை கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.