/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வயல்களில் தேங்கும் தண்ணீர் சாயும் நெற்பயிர்கள்
/
வயல்களில் தேங்கும் தண்ணீர் சாயும் நெற்பயிர்கள்
ADDED : ஜன 10, 2024 12:13 AM

ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு தாலுகாவில் பல்வேறு கிராமங்களில் பலநூறு ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்கள் அறுவடை நேரத்தில் மழை பெய்து வயல்களில் தண்ணீர் தேங்கியதால் விவசாயிகள் கண்ணீர் விடுகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் மம்சாபுரம், வன்னியம்பட்டி, மல்லி, மேட்டு முள்ளிக்குளம், உள்ளூர் பட்டி உட்பட பல்வேறு கிராமங்களில் பல நூறு ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிட்டு தற்போது அறுவடை செய்யும் சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் வயல்களில் தண்ணீர் தேங்கி நெற்பயிர்கள் சாய்ந்து மூழ்கியுள்ளன.
இதே போல் வத்திராயிருப்பு தாலுகாவில் பாதிக்கும் மேற்பட்ட வயல்களில் நெல் அறுவடை முடிந்த நிலையில் இன்னும் ஓரிரு நாட்களில் அறுவடை செய்ய தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள், கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையில் மூழ்கி விட்டன.
தற்போது அனைத்து கண்மாயிலும் முழு அளவில் தண்ணீர் நிரம்பி இருப்பதால் வயல்களில் வெட்டிவிடப்படும் தண்ணீரும் வெளியேறவில்லை. பல இடங்களில் நீர்மட்டம் அதிகரித்து மழை நீர் ஊற்றெடுத்து வயலில் தேங்கி நிற்கிறது.
கடந்த சில மாதங்களாக அரும்பாடு பட்டு வளர்த்த நெற்பயிர்கள் கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையில் தண்ணீரில் மூழ்கி விட்டதால் பாடுபட்ட விவசாயிகள் கண்ணீர் விடும் சூழலுக்கு ஆட்பட்டு உள்ளனர்.

