/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விருதுநகர் அரசு மருத்துவமனையில் தண்ணீர் பற்றாக்குறை! தேவை அதிகரிப்பால் விலைக்கு வாங்கும் சூழல்
/
விருதுநகர் அரசு மருத்துவமனையில் தண்ணீர் பற்றாக்குறை! தேவை அதிகரிப்பால் விலைக்கு வாங்கும் சூழல்
விருதுநகர் அரசு மருத்துவமனையில் தண்ணீர் பற்றாக்குறை! தேவை அதிகரிப்பால் விலைக்கு வாங்கும் சூழல்
விருதுநகர் அரசு மருத்துவமனையில் தண்ணீர் பற்றாக்குறை! தேவை அதிகரிப்பால் விலைக்கு வாங்கும் சூழல்
ADDED : ஆக 19, 2024 12:50 AM

விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்ட பின்பு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. தனியார் மருத்துவமனையில் எக்ஸ்ரே, ஸ்கேன், எம்.ஆர்.ஐ., ஆகிய பரிசோதனைகள், சிகிச்சைக்கைகளுக்கு அதிக செலவாகும் என்பதால் பலரும் வெளி நேயாளிகளாக வந்து பரிசோதனை செய்து உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்து செல்கின்றனர்.
மேலும் உள்நோயாளிகள் பிரிவு, ஆய்வகம், கழிப்பறை உள்ளிட்ட மருத்துவமனையின் அனைத்து உபயோகத்திற்கும் தண்ணீர் அத்தியாவசிய தேவையாக உள்ளது. தற்போது ஒரு நாளைக்கு மருத்துவமனைக்கு 2.5 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால் மருத்துவமனைக்கு தேவையான தண்ணீரை நகராட்சி நிர்வாகம் கொடுப்பதில்லை.
இதனால் நாள் ஒன்றுக்கு 1.25 லட்சம் லிட்டர் தண்ணீரை விலை கொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 24 ஆயிரம் லிட்டர் டேங்க் கொண்ட லாரிகளில் தினமும் 5 தடவை தண்ணீர் விலை கொடுத்து வாங்கப்பட்டு மருத்துவமனை தேவைக்கு பயன்படுத்தப்படுகிறது. இதற்காக ஒரு மாதத்திற்கு ரூ.3 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை செலவாகிறது.
மேலும் மருத்துவமனையில் பயன்படுத்தப்படும் தண்ணீர் மறுசுத்திகரிப்பு செய்யப்பட்டு கழிப்பறை பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படுகிறது. நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதால் தேவைப்படும் தண்ணீரின் அளவும் அதிகரித்து உள்ளது.
இங்கு அமைக்கப்பட்ட போர்வெல்கள் மூலம் கிடைக்கும் தண்ணீர் அதிக உப்புத்தன்மையுடன் இருப்பதால் சுத்திகரித்து பயன்படுத்த முடியாத நிலை நீடிக்கிறது.
விருதுநகர் நகராட்சி பகுதிகளுக்கு வழங்க போதிய தண்ணீர் இல்லாத நிலையில் அரசு மருத்துவமனையின் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு போதுமான தண்ணீரை வழங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் தாமிரபரணி குடிநீர் திட்டத்தில் இருந்து மருத்துவமனைக்கு என தனி மேல்நிலைக் குடிநீர் தொட்டி அமைத்து தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.