/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
திருச்சுழி திருமேனிநாதர் கோயில் தெப்பத்திற்கு தண்ணீர் வருவது நிறுத்தம்
/
திருச்சுழி திருமேனிநாதர் கோயில் தெப்பத்திற்கு தண்ணீர் வருவது நிறுத்தம்
திருச்சுழி திருமேனிநாதர் கோயில் தெப்பத்திற்கு தண்ணீர் வருவது நிறுத்தம்
திருச்சுழி திருமேனிநாதர் கோயில் தெப்பத்திற்கு தண்ணீர் வருவது நிறுத்தம்
ADDED : பிப் 17, 2024 04:31 AM
திருச்சுழி: திருச்சுழி கோயிலில் உள்ள தெப்பத்திற்கு கழிவு நீர் வருவதால் கண்மாயிலிருந்து வரும் தண்ணீர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
திருச்சுழி திருமேனிநாதர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 202 வது தலம். சிறப்பு வாய்ந்த கோயிலின் முன்புறம் கவ்வைக்கடல் தீர்த்தம் என அழைக்கப்படும் தெப்பம் உள்ளது. இந்த தெப்பத்திற்கு திருச்சுழி கண்மாயிலிருந்து தனியாக மழைநீர் வரத்து ஓடை அமைத்து தெப்பத்திற்கும், விவசாயம் செய்யவும் தண்ணீர் கொண்டு வந்தனர். கண்மாயிலிருந்து சுத்தமான தண்ணீர் தெப்பத்திற்கு வரும்.
நாளடைவில் கோயிலை சுற்றி குடியிருப்பு பகுதிகள் வந்ததையடுத்து, பசுமடத்து குடியிருப்பு பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரை, அந்த வழியாக உள்ள தெப்பத்து ஓடையில் சேர்த்து விட்டனர். இதனால், கண்மாயிலிருந்து வரும் தண்ணீருடன் கழிவு நீரும் சேர்ந்து தெப்பத்திற்குள் வருகிறது.
கோயில் அதனை சுற்றியுள்ள வீடுகளுக்கு குடிநீர் ஆதாரமாக இருந்த தெப்பத்தில் கழிவுநீர் கலந்து வருவதால் தண்ணீரை பயன்படுத்த முடியாமல் போகிறது. சமீபத்தில் பெய்த தொடர் கனமழையில் பல ஆண்டுகளுக்கு பிறகு திருச்சுழி கண்மாயில் தண்ணீர் நிறைந்துள்ளது.
இருப்பினும் தெப்பத்தில் கழிவுநீர் வருவதால் தண்ணீர் வரும் ஓடையை அடைத்து வைத்துள்ளனர். இதனால் தெப்பம் தண்ணீரின்றி வறண்டு கிடக்கிறது. கோயில் காரியங்களுக்கு தண்ணீர் இன்றி சிரமப்பட வேண்டி உள்ளது.
கோயில் நிர்வாகம் பலமுறை மனு கொடுத்தும் ஊராட்சியில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தெப்பத்திற்குள் கழிவு நீர் கலக்காத வகையில் ஓடையை சரி செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.