
சாத்துார்: சாத்துார் நள்ளி பெரிய கண்மாயில் கழிவுநீர் கலந்துள்ளதால் கண்மாய் முழுமையாக நிரம்பியும் விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
மேலும் மதகு பழுது, மடை பகுதியில் விரிசலால் தண்ணீர் வீணாக வெளியேறி வருவதால் தண்ணீரை தேக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
நள்ளி பெரிய கண்மாய் மூலம் 300 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் இருந்து இந்த கண்மாய்க்கு தண்ணீர் வருகிறது.
கோவில்பட்டி அருகில் உள்ள கிராமங்கள், குடியிருப்பு பகுதியில் இருந்து வரும் கழிவுநீர் நீர்வரத்து ஓடையில் கலந்து வருகிறது.
இதன் காரணமாக மழை தண்ணீர் மாசு அடைந்து காணப்படுகிறது. கழிவுநீர் கலந்த தண்ணீர் நள்ளி பெரிய கண்மாயில் தேங்கியுள்ளது. இதன் காரணமாக கண்மாய் தண்ணீர் முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.
மேலும் கண்மாயில் மதகுகளும் பழுதடைந்த நிலையில் உள்ளன. நீர் பாசன கால்வாயும் இடிந்து துார்ந்து போன நிலையில் உள்ளது.
கண்மாய் நீர் பாசனத்தின் மூலம் இந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் நெல் விளைவித்து வந்தனர். பச்சை பசுமை போர்வை போர்த்தியது போல் காணப்பட்ட இந்த பகுதி தற்போது மானாவரி நிலம் போல் மாறிவிட்டது.
கடந்த ஆறு ஆண்டுகளாக வருடம்தோறும் கண்மாய் நிறைந்தும் விவசாயிகளால் தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. கழிவு நீர் கலந்த தண்ணீரை நெற்பயிருக்கு பாய்ச்சிய போது விளைந்த நெற்பயிர் எல்லாம் சோடையாகிக் போகின.
விவசாயம் செய்து வந்த விவசாயிகள் தற்போது பருத்தி சோளம் மக்காச்சோளம் காய்கறிகள் விளைவித்து வருகின்றனர். ெல் விளைந்த பூமியில் தற்போது மாற்றுப் பயிர்கள் தான் விளைந்து வருகிறது.
பயிர்கள் கருகின
மகேந்திரன், விவசாயி: எங்கள் நிலத்தில் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு நெல் நாற்று பாவினோம் கண்மாய் தண்ணீரை பாசனத்திற்கு பயன்படுத்தியதால் பயிர் முழுவதும் சரியாக விளையாமல் போனது. சிலருக்கு பயிர்கள் கருகி விட்டன. தொடர்ந்து நெல் போட்டு நஷ்டத்தை சந்தித்து வந்தோம். தற்போது மக்காச்சோளம் சோளம் காய்கறியை கிணற்று பாசனம் மூலம் விளைவித்து வருகிறோம்.
ஆடு வளர்க்கிறோம்
செல்லையா, விவசாயி: கண்மாய் முழுமையாக நிரம்பி இருந்த போதும் நெல் பயிர் செய்ய முடியவில்லை. தொடர்ந்து எட்டு ஆண்டுகளாக நெல் பயிர் செய்து நஷ்டம் ஏற்பட்டது.
இதனால் மாற்றுத் தொழிலாக ஆடு வளர்க்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். கழிவு நீர் கலப்பதை தடுத்தால் தான் இந்த பகுதியில் விவசாயம் செழிக்கும்.
துார்வார வேண்டும்
பாண்டியன், விவசாயி: கண்மாயில் அடர்த்தியாக முள் செடி வளர்ந்துள்ளது. இவை கண்மாயில் தண்ணீரை வேகமாக உறிஞ்சி வற்றச் செய்து விடுகின்றன. கரைப்பகுதியிலும் அடர்த்தியாக முள் செடி வளர்ந்துள்ளது. மதகுபகுதிக்கு செல்ல முடியவில்லை.முள் செடிகளை அகற்றி கண் மாயை துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கழிவுநீரால் துர்நாற்றம்
அஜீத், விவசாயி: கோவில்பட்டி மற்றும் சுற்று கிராமங்களில் இருந்து அதிக அளவில் கழிவுநீர் கலந்து வருகிறது.இதன் காரணமாக இந்த தண்ணீரை பயிர்களுக்கு பாய்ச்சும் போது சரிவர காய் பிடிப்பதில்லை.
தண்ணீர் அருகில் சென்றாலே துர்நாற்றம் வீசுகிறது.கால்நடைகள் கூட தண்ணீர் குடிக்க மறுக்கின்றன. கண்மாய் நீர் வரத்து கால்வாயில் கழிவுநீர் கலப்பதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.