/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பலமில்லா கரைகள், லாரிகள் பாதைக்காக ஆக்கிரமிப்பு
/
பலமில்லா கரைகள், லாரிகள் பாதைக்காக ஆக்கிரமிப்பு
ADDED : பிப் 22, 2024 12:12 AM
திருச்சுழி, - திருச்சுழி பெரிய கண்மாயில் பல ஆண்டுகளுக்குப் பிறகு தண்ணீர் நிறைந்தும் அடர்த்தியாக வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்கள் வேகமாக உறிஞ்சுகின்றன, கண்மாய்க் கரைகளும் பலம் இல்லாத நிலை, கல்குவாரி செல்லும் லாரிகளுக்காக கண்மாய் ஆக்கிரமிப்பு போன்றவைகளால் இக்கண்மாய் விவசாயிகள் விரக்தியடைந்துள்ளனர்.
திருச்சுழியில் அருப்புக்கோட்டை ரோட்டில் அமைந்துள்ள பெரிய கண்மாய் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கண்மாய் 499 ஏக்கர் நீர் பிடிப்பு பகுதிகளாகவும், 487 ஏக்கர் விவசாயம் பாசன வசதி பெறுவதாகவும் உள்ளது. கண்மாய்க்கு 5 ஓடைகள் வழியாக தண்ணீர் வருகிறது. திருச்சுழி அதனைச் சுற்றியுள்ள தமிழ்பாடி, பச்சேரி உட்பட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயம் செய்து வந்தனர். நெல், பருத்தி, கடலை பயிர்கள் பயிரிடப்பட்டன. முன்பு, நெல் விவசாயத்தில் 3 போக சாகுபடி செய்து வந்த நிலையில், தற்போது ஒரு போக சாகுபடி செய்வதே சிரமமாக உள்ளது.
கண்மாயின் நீர்வரத்து ஓடைகள் அடைபட்டு போயின. கண்மாய் அதன் கரை பகுதிகளில் சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து உள்ளது. இவை கண்மாயில் சேரும் தண்ணீரை வேகமாக உறிஞ்சி விடுகின்றன.
கண்மாயின் சில பகுதிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கல்குவாரி லாரிகள் செல்வதற்குரிய பாதையாக மாற்றப்பட்டுவிட்டது. கண்மாய் சுற்றியுள்ள கிராமங்களின் குடிநீர் ஆதாரமாக இருந்தது. கண்மாய்க்கு சரிவர மழை நீர் சேகரம் ஆகாததால் கிராமங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கண்மாயின் கரைகள் உயரம் குறைந்தும் பலமற்று உள்ளது. அருப்புக்கோட்டை ரோடு பகுதியில் உள்ள கண்மாய் கரையே இல்லாமல் உள்ளது. இதனால் கண்மாயில் தண்ணீர் தேங்கினாலும் உடனடியாக கரை இல்லாததால் வெளியேறி விடுகிறது.
குண்டாற்றில் வரும் தண்ணீர் கடலுக்கு வீணாக செல்வதை தடுத்து கல்குறிச்சி அருகே பந்தநேந்தலில் ஒரு தடுப்பணை கட்டி திருச்சுழி கண்மாய்க்கு நீர் வரச் செய்ய வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை அடுத்து கடந்த ஆட்சியில் 10.50 கோடி ரூபாய் நிதியில் தடுப்பணை கட்டப்பட்டது.
தடுப்பணையிலிருந்து 8 கி.மீ., தூரத்தில் உள்ள திருச்சுழி கண்மாய்க்கு தண்ணீர் வரும் வழியில் சீமை கருவேலம் மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளது. இதனால் கண்மாய் தண்ணீர் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சீமை கருவேல மரங்களை அகற்றியும் கால்வாயை தூர்வாரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.