/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றாதது ஏன்
/
நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றாதது ஏன்
ADDED : அக் 25, 2024 04:48 AM
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் உள்ள நீர்வழிப் பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் பேசினார்.
அருப்புக்கோட்டை நகராட்சி கூட்டம் தலைவர் சுந்தரலட்சுமி தலைமையில் நடந்தது. கமிஷனர் ராஜமாணிக்கம், துணைத் தலைவர் பழனிச்சாமி, அதிகாரிகள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நடந்த விவாதங்கள்:
பாலசுப்பிரமணியன், (மா. கம்யூ.,): விருதுநகர் ரோடு மலையரசன் கோயில் பகுதிகளில் உள்ள கணவாய்களின் நீர் வழி பாதைகள் அனைத்தும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. 2 1/2 ஆண்டுகளாக அகற்ற நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. என்றைக்குத்தான் அகற்ற போகிறீர்கள். இதற்கு கண்டிப்பாக தீர்வு காண வேண்டும்.
காந்திமதி, (தி.மு.க.,): முத்துமாரியம்மன் கோயில் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளது. மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல சிரமப்படுகின்றனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
பழனிச்சாமி, துணை தலைவர்: துரித நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்.
ஜெயகவிதா, ( தி.மு.க.): தெற்குத் தெரு மீனாட்சி தெருவில் நகராட்சிக்கு சொந்தமான 16 ஆயிரம் சதுர அடியில் நிலம் உள்ளது. இதை அளந்து நகராட்சி கையகப்படுத்த வேண்டும்.
ராமதிலகம், (அ.தி.மு.க.,): திருச்சுழி ரோடு பகுதி இருபுறமும் நடைபாதைகளை ஆக்கிரமித்து கடைகள் போடப்பட்டுள்ளன. போக்குவரத்திற்கு இடைஞ்சலாக உள்ளது. இதை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுங்கள்.
இவ்வாறு விவாதங்கள் நடந்தது.