/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வன விலங்குகளால் சாகுபடி பரப்பு குறையுது; விளைநிலம் மனைகளாக மாறும் அவலம்
/
வன விலங்குகளால் சாகுபடி பரப்பு குறையுது; விளைநிலம் மனைகளாக மாறும் அவலம்
வன விலங்குகளால் சாகுபடி பரப்பு குறையுது; விளைநிலம் மனைகளாக மாறும் அவலம்
வன விலங்குகளால் சாகுபடி பரப்பு குறையுது; விளைநிலம் மனைகளாக மாறும் அவலம்
ADDED : மே 28, 2025 07:43 AM

சாத்துார் : விருதுநகர் மாவட்டத்தில் காட்டுப்பன்றி, மான் போன்ற வனவிலங்குகளின் தொந்தரவால் விளைநிலங்களில் சாகுபடி பரப்பு குறைந்து வரும் நிலையில், விளைநிலங்கள் குடியிருப்பு மனைகளாக மாறும் அவலமும் அரங்கேறி வருகிறது. இதை தடுக்க மாவட்ட நிர்வாகம் சாகுபடி பரப்பு அதிகரிப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மாவட்டம் முன்னேற விழையும் மாவட்டமாக மத்திய அரசால் கண்டறியப்பட்டு சுகாதாரம், உட்கட்டமைப்பு, வேளாண் உள்ளிட்ட பல்வேறு குறியீடுகளை இலக்காக கொண்டு வளர்ந்து வருகிறது. இங்கு பெரும்பாலும் கிராமங்களே அதிக அளவில் உள்ளன. அக்கிராமங்கள் பெரிதும் விவசாயத்தை சார்ந்தே உள்ளன.
விவசாயிகள் வாழ்விற்காக அரசு பல கண்மாய்களை உருவாக்கி உள்ளது. அதன் நீர் பாசனத்தின் மூலம் நெல், பருத்தி, கம்பு, கேழ்வரகு, மக்காச்சோளம் என பல்வேறு பயிர்களை விவசாயிகள் விளைவித்து வருகின்றனர்.
சில ஆண்டுகளாக நகர் பகுதியில் இருந்தும் ஆலைகளில் இருந்தும் வெளியாகும் கழிவு நீர் கண்மாய்களில் கலந்து வருவதால் கண்மாய் தண்ணீர் மாசடைந்து விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது.
மாசடைந்த தண்ணீரை விவசாயத்திற்கு பயன்படுத்தும் போது பயிர்கள் ஒரு புறம் கருகியும் காய் பிடிக்காமல் சொத்தையாகி விடுவதாக விவசாயிகள் கூறுகின்றனர். இதனால் கணமாய் பாசனத்தின் மூலம் விவசாய பணிகளை செய்த விவசாயிகள் பலரும் தற்போது தங்கள் நிலங்களை மானாவாரி நிலமாக மாற்றி மக்காச் சோளம் விவசாயம் செய்து வருகின்றனர்.
கிணற்று பாசனத்தின் மூலம் காய்கறிகள், மிளகாய் உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் பயிர் செய்து வரும் நிலையில் மானாவாரி நிலத்தில் விளையும் மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களையும் காட்டுப் பகுதியில் உள்ள முயல், காட்டுப்பன்றி, மான்கள் போன்றவை இரவு நேரத்தில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இதனால் விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.
கண்மாய் தண்ணீரும் பாழாகி, வறண்ட நிலையில், வன விலங்கு சேதத்தாலும் துவண்ட விவசாயிகள் பல ஆண்டுகளாக விவசாயம் செய்யாமல், தங்கள் நிலங்களை தரிசாக போட்டுள்ளனர்.
ஏற்கனவே 5 ஆண்டுகளுக்கு மேலாக தரிசாக உள்ள நிலங்களை ரியல் எஸ்டேட் அதிபர்கள் விலைக்கு வாங்கி குடியிருப்பு மனைகளாக மாற்றி யுள்ளனர். இதனால் தற்போது ஊராட்சி பகுதிகளில் புதிய புதிய நகர்கள் உருவாகி வருகின்றன.
மாவட்டத்தில் சாகுபடி பரப்பு குறைந்து வருகிறது. ஊராட்சிகளில் உள்ள விவசாய கூலி தொழிலாளர்கள் விவசாய பணி கிடைக்காததால் நுாறு நாள் வேலை திட்டத்தை நம்பி வாழ வேண்டிய நிலை உள்ளது.
வன விலங்குகளை கட்டுப்படுத்துவதோடு, கண்மாய் தண்ணீர் மாசு அடைவதை தடுத்து விவசாய பணிகளை ஊக்கப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.