விருதுநகர், சாத்துார், அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம் நகராட்சி பகுதியிலும் சிவகாசி மாநகராட்சியிலும் 10 முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
விருதுநகர் மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக தாமிரபரணி, மானுார், திருப்பாச்சேத்தி, உள்ளிட்ட பல்வேறு கூட்டுக் குடிநீர் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
இவை போக உள்ளூர் நீர் ஆதாரங்களை பயன்படுத்தி பொதுமக்களுக்கு உள்ளாட்சி நிர்வாகங்கள் குடிநீர் வினியோகம் செய்து வருகின்றன. இருந்த போதும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளும் குடிநீர் தட்டுப்பாடு தீராத பிரச்சனையாக உள்ளது இதற்கு காரணம் வீடுகள் ஓட்டல்கள் லாட்ஜ்களில் மின் மோட்டார்கள் மூலம் அதிக அளவு குடிநீரை உறிஞ்சுவதால் மற்ற பகுதிக்கு தண்ணீர் செல்லாமல் தடை படுகிறது. மேலும் பலர் தரைமட்ட அளவில் தொட்டிகளை கட்டி அதில் குடிநீரை நிரப்பி பின்னர் மேல்நிலைத் தொட்டிகளில் ஏற்றி பயன்படுத்தி வருகின்றனர்.
இதன் காரணமாக மேட்டுப்பகுதியில் வசிப்பவர்களுக்கு குடிநீர் கிடைக்காமல் தட்டுப்பாடு நிலவுகிறது. கடந்த காலங்களில் நகராட்சி பகுதிகளில் குடிநீர் இணைப்பு குழாயில் மின் மோட்டார் பொருத்தி தண்ணீர் எடுத்தால் அந்த மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதன் காரணமாக அனைத்து பகுதி மக்களுக்கும் சீராக குடிநீர் வினியோகம் செய்யப் பட்டது. தற்போது அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் வசதி படைத்தவர்கள் தற்போது மின் மோட்டார் மூலம் குடிநீரை அதிக அளவில் எடுப்பதால் வசதியற்ற நடுத்தர மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
அன்றாடம் குடிநீரை விலைக்கு வாங்க ரூ30 வரை செலவழிக்கும் நிலையில் உள்ளது. சில பகுதிகளில் உப்பு தண்ணீரையும் விலைக்கு வாங்கி பயன்படுத்தும் நிலை உள்ளது. இதனால் நடுத்தரமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
குடிநீர் வினியோகம் நடைபெறும் போது நகராட்சி, மாநகராட்சி பணியாளர்கள் திடீர் ஆய்வு செய்து குடிநீர் குழாயில் பொருத்தியுள்ள மோட்டார்களை பறிமுதல் செய்ய வேண்டும். என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.