/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
குறுங்காடுகளில் கருகி வரும் மரக்கன்றுகள் கவனிக்கப்படுமா; நோக்கம் வீணாகி சுற்றுச்சூழலும் பாதிக்குது
/
குறுங்காடுகளில் கருகி வரும் மரக்கன்றுகள் கவனிக்கப்படுமா; நோக்கம் வீணாகி சுற்றுச்சூழலும் பாதிக்குது
குறுங்காடுகளில் கருகி வரும் மரக்கன்றுகள் கவனிக்கப்படுமா; நோக்கம் வீணாகி சுற்றுச்சூழலும் பாதிக்குது
குறுங்காடுகளில் கருகி வரும் மரக்கன்றுகள் கவனிக்கப்படுமா; நோக்கம் வீணாகி சுற்றுச்சூழலும் பாதிக்குது
ADDED : ஜூலை 07, 2025 02:20 AM

காலநிலை மாற்றத்தால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.  சராசரி வெப்பமாக 1.3 டிகிரி செல்சியஸ் இருந்தது. இன்னும் 10 ஆண்டுகளில் 0.2 டிகிரி செல்சியஸ் உயர வாய்ப்பு உள்ளது. அப்போது பாதிப்புகள் கடுமையாக இருக்கும். கார்பன் வெளியேற்றத்தை குறைத்து,  பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க, அதிக மரங்கள் வளர்க்க வேண்டும் என அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது.
தமிழகத்தில் வனப்பரப்பு 22.71 சதவீதத்தை,  33 சதவீதமாக உயர்த்த முடிவு  எடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 10 ஆயிரம்  குறுங்காடுகளை உருவாக்க திட்டமிட்டு, ஆயிரம் உள்நாட்டு மரங்களை நட  திட்டமிடப்பட்டது. காற்று மாசை கட்டுப்படுத்தி, கரியமில வாயு அளவை குறைத்து, ஆக்ஸிஜன் அளவை அதிகரித்து, மழைப் பொழிவை பெற குறுங்காடுகள் பயனுள்ளதாக இருக்கும் என கருதப்பட்டது.
குறைந்த காலத்தில் அடர்ந்த வனப்பகுதியை ஏற்படுத்துவது அவசியமானது. 10 ஆண்டுகளில் ஒரு மரம் எவ்வளவு வளர்ச்சி அடையுமோ அந்த வளர்ச்சி இரண்டே ஆண்டுகளில் கிடைத்துவிடும்.  இயற்கை காடுகளை விட பத்து மடங்கு அதிக வேகமாகவும் 30 மடங்கு அதிக நெருக்கமாகவும்  வளரும்.
இதற்காக  கிராமப்புறங்களில் உள்ள ஊராட்சி புறம்போக்கு நிலங்களை தேர்வு செய்து அதில் குறுங்காடுகளை உருவாக்கினர்.  சீமை கருவேல மரங்களை அகற்றி குறுங்காடுகள் உருவாக்கப்பட்டன. இதன் மூலம் பல உயிரினங்கள் பயனடையும் என நம்பப்பட்டது.
அரசு,  தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான காலி நிலங்கள் இருந்தால் அதிலும் குறுங்காடுகள் அமைத்து நல்ல முறையில் பராமரிக்கப்பட வேண்டும் என்பது நோக்கம். நுாறு நாள் வேலைத்திட்டத்தில்   ஒரு சில இடங்களில் தண்ணீர் விட்டு மரக்கன்றுகளை ஓரளவுக்கு உருவாக்கினர். பெரும்பாலான இடங்களில் கண்டும் காணாமல் அப்படியே விட்டுவிட்டனர்.
தற்போது போதிய பராமரிப்பு இன்றி கடும் வெயிலுக்கு கருகி வருகின்றன. அங்கிருந்த பொருட்கள் காணாமல் போயின. ஏராளமான அரசு நிதி  வீணாகி வருகிறது. அத்துடன் சுற்றுச்சூழல் பாதிக்கும் அபாயம் இருந்து வருகிறது. ஆகவே  பெரும்பாலான இடங்களில் கவனிப்பாரற்று கிடக்கும் குறுங்காடுகளை,  பராமரிக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

