/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தென் மாவட்டத்திற்கு தேவை கூடுதல் ரயில் நடவடிக்கை எடுப்பாரா பொது மேலாளர்
/
தென் மாவட்டத்திற்கு தேவை கூடுதல் ரயில் நடவடிக்கை எடுப்பாரா பொது மேலாளர்
தென் மாவட்டத்திற்கு தேவை கூடுதல் ரயில் நடவடிக்கை எடுப்பாரா பொது மேலாளர்
தென் மாவட்டத்திற்கு தேவை கூடுதல் ரயில் நடவடிக்கை எடுப்பாரா பொது மேலாளர்
ADDED : நவ 29, 2024 02:40 AM
ஸ்ரீவில்லிபுத்தூர்:தென் மாவட்ட மக்கள் சிரமமின்றி பயணிக்கும் வகையில் சில ரயில்களின் சேவைகளை கூடுதலாக இயக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தென் மாவட்டங்களைச் சேர்ந்த பல லட்சம் மக்கள் சென்னை, கோவை, பெங்களூரு உட்பட பல்வேறு நகரங்களில் வசிக்கின்றனர். அதற்கேற்ப ரயில் இல்லை.
குறைந்த பட்சம் வார விடுமுறை நாட்களிலாவது சிறப்பு ரயில்களை சென்னை, கோவை, பெங்களூரில் இருந்து இயக்க வேண்டும். இதேபோல் அந்தியோதயா ரயில்களை இயக்கினால் ஏழை மக்கள் பயனடைவார்கள்.
மானாமதுரை- - விருதுநகர் வழித்தடம் அகல ரயில் பாதையாக மாற்றப்பட்ட நிலையில், கடந்த 11 ஆண்டாக சென்னையிலிருந்து செங்கோட்டைக்கு சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் வாரத்தில் மூன்று நாள் மட்டுமே இயங்கி வருகிறது. இதனை தினசரி ரயிலாக மாற்ற வேண்டும்.
காரைக்குடி-- விருதுநகர், திருவாரூர்-- காரைக்குடி பயணிகள் ரயில்களை செங்கோட்டை வரை நீட்டித்தால் தென் மாவட்ட மக்கள் டெல்டா மாவட்டங்களுக்கு செல்ல ரயில் வசதி கிடைக்கும்.
மதுரையில் இருந்து விருதுநகர், ராஜபாளையம், தென்காசி, புனலூர், கொல்லம் வழியாக திருவனந்தபுரம், எர்ணாகுளம் நகரங்களுக்கு சென்று திரும்பும் வகையில் காலை நேரத்தில் முன்பதிவு இல்லா பயணிகள் ரயில் இயக்க வேண்டும்.
மதுரையில் இருந்து தினமும் காலையில் போடி செல்லும் ரயிலை மீண்டும் மறுமார்க்கத்தில் மதுரை வந்து திரும்பும் வகையில் கூடுதல் சேவையாக இயக்க வேண்டும்.
திருநெல்வேலியில் இருந்து செங்கோட்டை வழியாக கொல்லத்திற்கு மீட்டர் கேஜ் பாதை இருந்த போது இயங்கிய ரயில்கள் தற்போது அகல ரயில் பாதையாகி பல ஆண்டுகளான நிலையில் மீண்டும் இயக்கப்படவில்லை. எனவே, திருநெல்வேலி- கொல்லம் ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும்.
கோவை- -மதுரை ரயிலை செங்கோட்டை சென்று திரும்பும் வகையில் இயக்கினால், விருதுநகர், தென்காசி மாவட்ட மக்கள் பயனடைவர். திருநெல்வேலி-- சென்னை வந்தே பாரத், வைகை எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணிக்க இணைப்பு வசதி கிடைக்கும்.
திருநெல்வேலியில் இருந்து தென்காசி, விருதுநகர், மதுரை வழியாக பெங்களூரு, கோவை, திருப்பதி நகரங்களுக்கு தினசரி ரயில் இயக்க வேண்டும்.
செங்கோட்டையில் இருந்து ராஜபாளையம், விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை வழியாக ராமேஸ்வரம், வேளாங்கண்ணி நகரங்களுக்கு முன்பதிவு இல்லாத பயணிகள் இயக்க வேண்டும்.
கூடுதல் ரயில்கள் இயக்க வசதியாக திருநெல்வேலி, செங்கோட்டை, மதுரை, காரைக்குடியில் கூடுதல் ரயில்வே யார்டுகளை உருவாக்க வேண்டும்.
இதற்கு தெற்கு ரயில்வே பொதுமேலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.