/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பேராபட்டி அரசு உயர்நிலை பள்ளி தரம் உயருமா
/
பேராபட்டி அரசு உயர்நிலை பள்ளி தரம் உயருமா
ADDED : ஜன 26, 2025 04:49 AM
சிவகாசி : சிவகாசி அருகே பேராபட்டி அரசு உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டுமென பெற்றோர் வலியுறுத்தி வருகினற்னர்.
சிவகாசி அருகே பேராபட்டியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு நடுநிலை பள்ளியாக இருந்த இப்பள்ளி தன்னார்வலர்கள் இடம் வாங்கிக் கொடுத்த பின்னர் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.
இங்கு 10 ம் வகுப்பில் 50 மாணவர்கள் படிக்கின்றனர். 10 ம் வகுப்பு முடித்த மாணவிகள் மேல்நிலைப் பள்ளிக்கு 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிவகாசிக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதால் பெரும்பான்மையான மாணவிகள் 10 ம் வகுப்போடு படிப்பை நிறுத்தி விடுகின்றனர்.
இதனைத் தொடர்ந்து இப்பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்துவதற்காக மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்கள் நிதியாக 2 லட்சம் ரூபாய் அரசுக்கு வழங்கப்பட்டது. ஆனால் இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் பேராபட்டியில் 10 ம் வகுப்பு முடித்த மாணவிகள் மேல்நிலைப் பள்ளியை தொடரவில்லை. இதே போல் அருகில் உள்ள அனுப்பன்குளம் உயர்நிலைப் பள்ளியிலும் 10 ம் வகுப்பிற்கு பின்னர் மாணவிகள் மேல்நிலைப் பள்ளி படிப்பை தொடர வழியில்லாமல் படிப்பை இடைநிறுத்தி விடுகின்றனர். இதனால் ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் குறைந்தது 50 மாணவிகள் இடை நிற்கின்றனர்.
எனவே மாணவிகளின் இடை நிற்றலை கருத்தில் கொண்டு பேராபட்டி உயர்நிலைப் பள்ளியை வரும் கல்வியாண்டில் மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என பெற்றோர்கள், மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.