/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அரசு மருத்துவமனை குப்பை கிடங்கில் நெளியுது புழுக்கள்; ஷிப்ட் முடியும் நேரத்தில் டிராக்டர் தேவை
/
அரசு மருத்துவமனை குப்பை கிடங்கில் நெளியுது புழுக்கள்; ஷிப்ட் முடியும் நேரத்தில் டிராக்டர் தேவை
அரசு மருத்துவமனை குப்பை கிடங்கில் நெளியுது புழுக்கள்; ஷிப்ட் முடியும் நேரத்தில் டிராக்டர் தேவை
அரசு மருத்துவமனை குப்பை கிடங்கில் நெளியுது புழுக்கள்; ஷிப்ட் முடியும் நேரத்தில் டிராக்டர் தேவை
ADDED : நவ 09, 2025 07:01 AM

விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவமனை குப்பை கிடங்கில் மண்தரையில் தேங்கும் நாள்பட்ட குப்பையில் அதிக அளவில் புழுக்கள் நெளிவதால் அகற்றும் பணியாளர்கள் நோயாளிகளாக மாறும் நிலை உள்ளது.
ஒவ்வொரு ஷிப்ட் முடியும் நேரத்தில் குப்பையை நேரடியாக டிராக்டரில் கொட்டி வெளியேற்றும் நடவடிக்கையை நிர்வாகம் எடுக்க வேண்டும்.
விருதுநகர் அரசு மருத்துவமனை, மகப்பேறு பிரிவின் வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பை அனைத்தும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அருகே குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. இவற்றில் நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் டைபர் ஆகியவையும் கொட்டப்படுகிறது.
கடந்த சில நாட்களாக பெய்த மழையால் கிடங்கின் மண்தரையில் கொட்டப்பட்ட குப்பையில் டைபருடன் தண்ணீர் தேங்கி புழுக்கள் உற்பத்தியாகி அதிக துர்நாற்றம் வீசுகிறது. இதனால் டிராக்டரில் புழுக்கள் நிறைந்த குப்பையை ஏற்றும் போது பணியாளர்கள் மீதும் புழுக்கள் விழுவதால் அதிக நேரம் பணியில் ஈடுபடும் பலரும் தற்போது நோயாளிகளாக மாறியுள்ளனர்.
ஒவ்வொரு ஷிப்ட் முடியும் நேரத்தில் வார்டுகளில் இருந்து பணியாளர்கள் கொண்டுவரும் குப்பையை அப்படியே டிராக்டரில் கொட்டி அகற்றினால் குப்பை தேங்காமல், புழுக்கள் உற்பத்தியாகும் அளவிற்கு நாள்பட்ட குப்பை சேர்வதை தடுக்க முடியும்.
மேலும் பணியாளர்கள் பற்றாக்குறையை காரணம் காட்டி தொடர்ச்சியாக ஒரு சில பணியாளர்களை மட்டும் குப்பை ஏற்றும் பணியில் தொடர்ந்து ஈடுபடுத்துகின்றனர். இதில் உடல்நிலை சரியில்லை என தெரிவிக்கும் பணியாளர்களுக்கு மாற்றுப்பணி வழங்காமல் கட்டாயப்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது. எனவே நாள்பட்ட குப்பை தேங்குவதை தடுக்க பணியாளர்கள் ஷிப்ட் முடியும் நேரத்தில் வார்டுகளில் இருந்து கொண்டுவரும் குப்பையை நேரடியாக தினசரி மூன்று முறை டிராக்டரில் கொட்டி அகற்றவும், குப்பை கிடங்கில் சிமென்ட் தளங்கள், தண்ணீர் வடிகால் அமைக்க மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

