ADDED : ஜன 14, 2025 04:59 AM

சாத்துார்: திறந்தவெளி கழிப்பறை, பள்ளிமுன் தேங்கும் கழிவுநீர், உட்பட பல்வேறு பிரச்னைகளால் சாத்தூர் போத்திரெட்டிப்பட்டி ஊராட்சி மக்கள் அவதிப்படுகின்றனர்.
சாத்துார் ஊராட்சி ஒன்றியத்தில் போத்தி ரெட்டிபட்டி ஊராட்சியில் பல தெருக்களில் சிமென்ட் ரோடு மற்றும் பேவர் பிளாக் ரோடு போடப்பட்டுள்ளது. ஆனால் வடக்கு தெருவில் மட்டும் ஒரு பகுதியில் சிமென்ட் ரோடு பேவர் பிளாக் ரோடு அமைக்கப்படாமல் உள்ளது.
இந்தப் பகுதியில் தெருவின் நடுவில் ஓடும் சாக்கடையால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. இங்குள்ள பயணிகள் நிழற்குடை சேதமடைந்த நிலையில் உள்ளது.
மேலும் இ சேவை மைய கட்டடமும் காட்சி பொருளாக உள்ளது. ஊராட்சியில் செயல்படும் அரசு உயர்நிலை பள்ளிக்கு எதிரிலேயே கழிவுநீர் குளம் போல் தேங்கி நிற்பதால் மாணவர்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
கிராம நிர்வாக அலுவலக கட்டடம், மகளிர் சுய உதவி குழு கட்டடமும் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது.
வாறுகால்களில் குப்பை மேவி காணப்படுகின்றன. குப்பைகளை துாய்மை காவலர்கள் வாங்கிச் சென்று ரோட்டின் ஓரத்தில் கொட்டி தீ வைத்து எரிப்பதால் புகை மூட்டம் எழுந்து குடியிருப்பு வாசிகள் அவதிப்படும் நிலை உள்ளது.
புதிய கட்டடம் அவசியம்
ராமானுஜம், குடும்பத் தலைவர்: மகளிர் சுய உதவி குழு கட்டடம், விஏஓ அலுவலக கட்டடங்கள் சேதமடைந்த நிலையில் உள்ளது.
வி.ஏ.ஓ. தங்கி இருந்து பணிபுரிய அலுவலகம் இல்லை ஏற்கனவே இருந்த கட்டடம் கூரை சேதம் அடைந்து இடிந்து கீழே விழுந்து வருவதால் வி.ஏ.ஒ. அலுவலகத்திற்கு வெளியில் உட்கார்ந்து பணிபுரியும் நிலை உள்ளது. புதிய கட்டடம் கட்டித் தர வேண்டும்.
கழிப்பறை வசதி தேவை
லட்சுமி, குடும்பத் தலைவி: ஊராட்சியில் பொது சுகாதார வளாகம் இல்லை. பழைய கழிப்பறை முள் செடி முளைத்து புதர் மண்டி காணப்படுகிறது.
திறந்தவெளியை நாடுவதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. புதிய பொது சுகாதார வளாகம் கட்டித்தர வேண்டும்.
செயல்படாத குளியல் தொட்டி
வெள்ளையப்பன், குடும்பத் தலைவர்: பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட குளியல் தொட்டி செயல்பாட்டிற்கு வரவில்லை. காட்சி பொருளாக உள்ளது. ஊராட்சியில் ஒரு தெருவில் சிமென்ட் ரோடும் மற்றொரு தெருவில் மண் ரோடும் உள்ளது.
பேவர் பிளாக் பதிக்கும் பணி ஒரு சில பகுதியில் மட்டும் நடந்துள்ளது.
ஊராட்சி அலுவலக கட்டடம் சேதமடைந்து இடிந்து போன நிலையில் உள்ளது. பயணிகள் நிழற்குடையும் சேதமடைந்து உள்ளது.
வாறுகால் வசதி தேவை
விண்ணரசி, குடும்பத் தலைவி: வீட்டில் தனி நபர் கழிப்பறை கட்டுவதற்கு ரூ 12 ஆயிரம் பணம் தருவதாக கூறினார்கள் இன்று வரை ஊராட்சியில் இருந்து பணம் தரவில்லை.
நடுத்தெருவில் கழிவுநீர் செல்கிறது. வாறு கால் வசதி இல்லை.
கழிவுநீர் ஊருக்கு வெளியே செல்லாமல் பள்ளிக்கு எதிரில் தேங்கி நிற்பதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.