லோக் அதாலத்: சட்ட நுணுக்கங்களில் கண்டிப்பு காட்ட வேண்டியதில்லை: ஐகோர்ட் நீதிபதி தகவல்
லோக் அதாலத்: சட்ட நுணுக்கங்களில் கண்டிப்பு காட்ட வேண்டியதில்லை: ஐகோர்ட் நீதிபதி தகவல்
ADDED : செப் 17, 2011 09:22 PM
மதுரை: 'லோக் அதாலத்' விசாரணையின் போது, சட்ட நுணுக்கங்களில் கண்டிப்பு காட்டப்படுவதில்லை'' என, ஐகோர்ட் கிளை நீதிபதி ஆர்.பானுமதி பேசினார்.
மதுரை ஐகோர்ட் கிளையில்,'மெகா லோக் அதாலத்' நேற்று நடந்தது.
பதிவாளர் சடையாண்டி வரவேற்றார். நீதிபதி பானுமதி பேசியதாவது: லோக் அதாலத் விசாரணைக்கு வழக்கறிஞர்கள், மனுதாரர்கள் திறந்த மனதுடன் வர வேண்டும். இதில் விரைவான நீதி கிடைக்கிறது. டிசம்பரில் நடந்த லோக் அதாலத்தில் 141 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, 3.45 கோடி ரூபாயும், சென்னையில் 198 வழக்குகளில் 5.15 கோடி ரூபாயும் இழப்பீடு வழங்கப்பட்டது. ஆகஸ்டில் மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் 1,168 வழக்குகளில் 204க்கு தீர்வு கண்டு, 5.45 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது. இன்று எடுத்துக் கொள்ளப்பட்ட 958 வழக்குகள் பலவற்றுக்கு தீர்வு காணப்படும். இம்மாற்று முறை தீர்வு மூலம், கோர்ட் நடைமுறை தளர்வு செய்யப்படுவதுடன், சட்ட நுணுக்கங்களில் கண்டிப்பும் காட்டப்படுவதில்லை. கோர்ட்டில் செலுத்திய கட்டணமும் திருப்பி அளிக்கப்படுகிறது என்றார். நீதிபதி பி.ஜோதிமணி பேசுகையில், ''இன்று வாகன விபத்து, செக் மோசடி வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. ஓய்வு பெற்ற 10 நீதிபதிகள் இதை விசாரிக்கின்றனர். 20 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள வழக்குகள் பட்டியலிடப்பட்டுள்ளன. பல ஆண்டு வழக்குகளுக்கு ஒரே நாளில் தீர்வு காண்பது மகிழ்ச்சி தருகிறது'' என்றார். நீதிபதிகள் ஜனார்த்தன ராஜா, செல்வம், பதிவாளர் விஜயன் பங்கேற்றனர். சட்ட பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் செயலர் கணேசன் நன்றி கூறினார்.