மக்கள் பாதுகாப்பை உறுதி செய்யாமல்அணுமின் நிலையத்தை இயக்கக் கூடாது
மக்கள் பாதுகாப்பை உறுதி செய்யாமல்அணுமின் நிலையத்தை இயக்கக் கூடாது
UPDATED : அக் 02, 2011 05:07 AM
ADDED : அக் 02, 2011 04:40 AM

சென்னை:கூடங்குளம் அணுமின் நிலையம் அருகில் உள்ள மக்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாமல், அதை இயக்கக் கூடாது எனக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனு:அணுமின் நிலையத்தால் ஏற்படும் ஆபத்தால், வளர்ச்சியடைந்த நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்றவை கூட, அவற்றை அமைக்கும் எண்ணத்தை கைவிட்டு வருகின்றன.
ரஷ்யாவில் செர்னோபில் அணுமின் நிலைய விபத்தால், பாதிப்புகள் கடுமையாக இருந்தன.
இந்த விபத்துக்குப் பின், அணுமின் நிலையங்களை பல நாடுகள் மூடி வருகின்றன.ரஷ்யா உதவியுடன் கூடங்குளத்தில் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 2,000 மெகாவாட் மின்சாரம் தயாரிப்பதற்கான திட்டம் உள்ளது. இந்த அணுமின் நிலையத்தால் பாதிப்பு ஏற்படாது, பாதுகாப்பாக உள்ளது என அதிகாரிகள் உறுதியளித்தாலும், எந்த விபத்தும் ஏற்படாது என கூற முடியாது.அணுமின் நிலையத்தில் விபத்து ஏற்படும் பட்சத்தில், உடனடியாக எடுக்கப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி அறிந்து கொள்ள, பொது மக்களுக்கு உரிமை உள்ளது. அந்தப் பகுதியில் உள்ள மக்களை எப்படி மீட்பது, அவர்களுக்கு அளிக்க வேண்டிய மருத்துவ வசதிகள் பற்றி தெரிவிக்கப்பட வேண்டும். அணுமின் நிலையத்தில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு, பல்வேறு நோய்களை உருவாக்கும்.
இந்த கதிர்வீச்சின் பாதிப்பு, 170 கி.மீ., தூரம் வரை இருக்கும். விபத்து ஏற்பட்டால், 16 கி.மீ., தூரத்துக்குள் இருக்கும் மக்களை ஆறு மணி நேரத்துக்குள்ளும், 25 கி.மீ., தூரத்துக்குள் இருப்பவர்களை 12 மணி நேரத்துக்குள்ளும், 74 கி.மீ., தூரத்துக்குள் இருப்பவர்களை 24 மணி நேரத்துக்குள்ளும், 140 கி.மீ., தூரத்துக்குள் இருப்பவர்களை 48 மணி நேரத்துக்குள்ளும் அங்கிருந்து வெளியேற்ற வேண்டும்.கூடங்குளம் அணுமின் நிலையம் அமைந்துள்ள இடத்தில் இருந்து 170 கி.மீ.,க்கு உட்பட்டு வசிக்கும் மக்களுக்கு, அனைத்து பாதுகாப்பு வசதிகளையும் அரசு செய்து கொடுக்க வேண்டும். இதற்காக போதிய நிதியை ஒதுக்க வேண்டும். அணுமின் நிலையம் செயல்படத் துவங்குவதற்கு முன், அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
பொது மக்களின் நலனுக்காகத் தான் கூடங்குளம் அணுமின் திட்டம் என்றால், அதை விட பொது மக்களின் உயிரும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏதாவது விபத்து ஏற்பட்டால், 170 கி.மீ., தூரம் வரையிலான பொது மக்களை பாதுகாப்பாக வெளியேற்ற என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய, அரசுக்கு உத்தரவிட வேண்டும். மருத்துவ வசதிகள், புனரமைப்பு வசதிகள், நிதி ஒதுக்கீடு விவரங்களை தெரிவிக்க வேண்டும்.எனவே, கூடங்குளத்தில் விபத்து ஏற்படும் பட்சத்தில் அந்தப் பகுதி மக்களை வெளியேற்றவும், மருத்துவ வசதிகள் அளிக்கவும் போதிய பாகாப்பு ஏற்பாடுகள், நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ளாமல், அங்கு அணுமின் நிலையம் செயல்படக் கூடாது என உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இம்மனு, தசரா விடுமுறைக்குப் பின் விசாரணைக்கு வருகிறது.

