சட்டம் பயிலும் மாணவர்கள்புத்தக அறிவை மட்டுமே பெறுகின்றனர்:நீதிபதி
சட்டம் பயிலும் மாணவர்கள்புத்தக அறிவை மட்டுமே பெறுகின்றனர்:நீதிபதி
UPDATED : ஆக 28, 2011 12:33 AM
ADDED : ஆக 27, 2011 11:56 PM
சென்னை:'சட்டம் பயிலும் மாணவர்கள், படிக்கும் போதே வழக்கறிஞர் பணிக்கான அனுபவ அறிவைப் பெற வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு கூறினார்.தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலையில், 'அரசியலமைப்பு கலாசாரம்' எனும் தலைப்பில், சொற்பொழிவு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற, சுப்ரீம் கோர்ட் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு பேசியதாவது:ஐரோப்பிய நாடுகளின் அரசியலமைப்பு வழங்காத, பேச்சு உரிமை, சமய உரிமை போன்றவற்றை, நமது அரசியலமைப்பு குடிமகன்களுக்குத் தந்துள்ளது. போலீஸ், 'என்கவுன்டர்', கவுரவக் கொலை போன்ற, சட்டத்திற்குப் புறம்பான நிகழ்வுகள் தடுக்கப்பட வேண்டும்.இந்தியாவில், முப்பது லட்சம் பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். சமூகம் சார்ந்த இப்பிரச்னைக்கு, சட்ட ரீதியான தீர்வு காண்பது கடினம். இப்பெண்களுக்கு, வாழ்வில் முன்னேறுவதற்கான தொழில் பயிற்சிகள் அளிக்கப்படுவது அவசியம்.
ஆறு கோடி மக்கள் தொகை கொண்ட பிரான்ஸ், இங்கிலாந்து நாடுகள், ஐ.நா., பாதுகாப்பு சபையில் அங்கம் வகிக்கின்றன. 120 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவால், அச்சபையில் இடம்பிடிக்க இயலவில்லை. இதற்கு, நம் நாட்டில் நிலவும் வறுமையே முக்கியக் காரணம். அத்தியாவசிய பொருட்களின் விலையைக் குறைத்து, சாமான்ய மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்கச் செய்வதன் மூலம், வறுமையை ஒழிக்க முடியும்.இவ்வாறு, மார்க்கண்டேய கட்ஜு பேசினார்.
அதன்பின், மாணவர்களின் கேள்விக்கு அவர் அளித்த பதில்:குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளைத் தடுக்க, தனிச் சட்டம் இயற்றப்படுமா?
இவற்றைத் தடுக்க, நிறைய சட்டங்கள் ஏற்கனவே உள்ளன. தனிச் சட்டம் தேவையில்லை.
சட்டக் கல்லூரிகளின் கல்வித் தரத்தை மேம்படுத்துவற்கு என்ன வழி?
நம் நாட்டில் பெரும்பாலான சட்டக் கல்லூரிகளில், மாணவர்கள் புத்தக அறிவை மட்டுமே பெறுகின்றனர். அவர்களுக்கு, போலீசார், எப்.ஐ.ஆர்., பதிவு செய்ய மறுத்தால், அதை சட்டரீதியாக எப்படி அணுகுவது, என்பது கூடத் தெரிவதில்லை.இதனால், அவர்கள் ஐந்தாண்டு பட்டப்படிப்பை முடித்தபின், மேலும் மூன்றாண்டுகள், வழக்கறிஞர் பயிற்சி எடுக்க வேண்டியுள்ளது. இந்நிலை மாற, சட்டம் பயிலும் போதே, வழக்கறிஞர்களுக்கான அனுபவ அறிவை மாணவர்கள் பெறும்படி, பாடத்திட்டங்கள் அமைக்கப்பட வேண்டும்.

